
இங்கிலாந்து அணி தற்சமயம் வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரிலும், 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரிலும் விளையாடி வருகிறது. இதில் நடந்து முடிந்த முதலிரண்டு ஒருநாள் போட்டிகளின் முடிவில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியைப் பதிவுசெய்து 1-1 என்ற கணக்கில் தொடரை சமன்செய்து அசத்தியுள்ளன.
இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான ஒருநாள் தொடரின் வெற்றியாளரைத் தீர்மானிக்கும் மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியானது இன்று பார்படாஸில் உள்ள கென்ஸிங்டன் ஓவல் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பந்துவீசுவாதாக அறிவித்து இங்கிலாந்து அணியை பேட்டிங் செய்ய அழைத்தது. அதன்படி களமிறங்கிய இங்கிலாந்து அணிக்கு பில் சால்ட் - வில் ஜேக்ஸ் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் பில் சால்ட் தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர்.
அதேசமயம் மறுபக்கம் விளையாடிய வில் ஜேக்ஸ் 5 ரன்களில் நடையைக் கட்ட, அடுத்து வந்த ஜோர்டன் காக்ஸ் ஒரு ரன்னிலும், ஜேக்கப் பெத்தெல் ரன்கள் ஏதுமின்றியும், கேப்டன் லிவிங்ஸ்டோன் 6 ரன்னிலும் என விக்கெட்டுகளை இழந்து ஏமாற்றமளித்தனர். பின்னர் பில் சால்டுடன் இணைந்த சாம் கரணும் பொறுப்புடன் விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இதில் பில் சால்ட் அரைசதம் கடந்த நிலையில், மறுமுனையில் சாம் கரண் 40 ரன்கள் எடுத்து விக்கெட்டை இழந்தார். அவரைத்தொடர்ந்து பில் சால்ட் 4 பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 74 ரன்களில் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினார்.