வெஸ்ட் இண்டீஸுக்காக வரலாற்று சாதனை படைத்த ஜெய்டன் சீல்ஸ்!
பாகிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் போட்டியில் 6 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் வெஸ்ட் இண்டீஸ் பந்து வீச்சாளர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார்.

Jayden Seales Record: பாகிஸ்தானுக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் வேகப்பந்து வீச்சாளர் ஜெய்டன் சீல்ஸ் 6 விக்கெட்டுகளை கைப்பற்றியதுடன், இந்த தொடரின் தொடர் நாயகன் விருதை வென்றார்.
வெஸ்ட் இண்டீஸ் - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நடைபெற்றது. இதில் நடந்து முடிந்த முதலிரண்டு போட்டிகளின் முடிவில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியைப் பதிவுசெய்து 1-1 என்ற கணக்கில் தொடரில் முன்னிலைப் பெற்றது. இதனையடுத்து தொடரின் வெற்றியாளரைத் தீர்மானிக்கும் மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி இன்று டிரினிடாட்டில் நடைபெற்றது.
இதில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணியில் டாப் ஆர்டர் வீரர்கள் சோபிக்க தவறிய நிலையிலும், கேப்டன் ஷாய் ஹோப் சதமடித்து அசத்தியதுடன் இறுதிவரை ஆட்டமிழக்காமல் 120 ரன்களைச் சேர்த்தார். இதன் மூலம் 50 ஓவர்கள் முடிவில் வெஸ்ட் இண்டீஸ் அணி 6 விக்கெட் இழப்பிற்கு 294 ரன்களைக் குவித்தது. பாகிஸ்தான் தரப்பில் நசீம் ஷா, அப்ரார் அஹ்மத் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
பின்னர் இலக்கை நோக்கி விளையாடிய பாகிஸ்தான் அணியில் சல்மான் ஆகா 30 ரன்களையும், முகமது நவாஸ் 23 ரன்களையும் சேர்த்ததை தவிர்த்து மற்ற வீரர்கள் சோபிக்க தவறியதால், அந்த அணி 92 ரன்களில் ஆல் அவுட்டானது. வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் ஜெய்டன் சீல்ஸ் 6 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதன்மூலம் வெஸ்ட் இண்டீஸ் அணி 202 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தியதுடன் 2-1 என்ற கணக்கில் ஒருநாள் தொடரையும் வென்றது.
இந்நிலையில் இப்போட்டியில் ஜெய்டன் சீல்ஸ் 6 விக்கெட்டுகளை கைப்பற்றியதன் மூலம் தனித்துவ சாதனை ஒன்றையும் படைத்துள்ளார். இந்த போட்டியில் சீல்ஸ் 7.2 ஓவர்களில் 18 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்து 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதன் மூலம் பாகிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் போட்டியில் 6 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் வெஸ்ட் இண்டீஸ் பந்து வீச்சாளர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார்.
Also Read: LIVE Cricket Score
இதற்கு முன் கடந்த 2000ஆம் ஆண்டு பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் வெஸ்ட் இண்டீஸின் பிராங்க்ளின் ரேஸ் 10 ஓவர்களில் 23 ரன்களைக் கொடுத்து 5 விக்கெட்டுகளை கைப்பற்றியதே சாதனையாக இருந்தது. அதனைத் தற்போது ஜெய்டன் சீல்ஸ் முறியடித்துள்ளார். இது தவிர, பாகிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் போட்டியில் சிறந்த பந்துவீச்சு செயல்திறனை வெளிப்படுத்திய தென் ஆப்பிரிக்காவின் டேல் ஸ்டெய்னின் சாதனையையும் ஜெய்டன் சீல்ஸ் முறியடித்துள்ளார்.
Win Big, Make Your Cricket Tales Now