வெஸ்ட் இண்டிஸ் அணி வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் செய்து மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட்டில் விளையாடி வ்ருகிறது. இதில் நடந்து முடிந்த ஒருநாள் தொடரை வங்கதேச அணி 2-1 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியது. இதையடுத்து இரு அணிகளுக்கும் இடையிலான டி20 தொடர் இன்று தொடங்கியது. அந்தவகையில் இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டி20 போட்டி இன்று சட்டோகிராமில் நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.
அதன்படி களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு அலிக் அதனாஸ் மற்றும் பிராண்டன் கிங் இணை அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்தனர். இதில் அலிக் அதனாஸ் 4 பவுண்டரிகள், ஒரு சிக்ஸர் என 34 ரன்களைச் சேர்த்து விக்கெட்டை இழக்க, அவரைத் தொடர்ந்து 33 ரன்களை எடுத்த கையோடு பிராண்டன் கிங்கும் விக்கெட்டை இழந்தார். மேற்கொண்டு களமிறங்கிய ஷெர்ஃபேன் ரூதர்ஃபோர்டும் முதல் பந்திலேயே ரன்கள் ஏதுமின்றி விக்கெட்டை இழந்தார். பின்னர் இணைந்த ஷாய் ஹோப் - ரோவ்மன் பாவெல் இணை சிறப்பாக விளையாடி ஸ்கோரை உயர்த்தினர்.
இதில் இருவரும் அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இந்த போட்டியில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த ஷாய் ஹோப் ஒரு பவுண்டரி, 4 சிக்ஸர்களுடன் 46 ரன்களையும், ரோவ்மன் பாவெல் ஒரு பவுண்டரி, 4 சிக்ஸர்களுடன் 44 ரன்களையும் சேர்த்து அணிக்கு தேவையான ஃபினிஷிங்கைக் கொடுத்தனர். இதன் மூலம் வெஸ்ட் இண்டீஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்து 165 ரன்களைச் சேர்த்தது. வங்கதேச அணி தரப்பில் தஸ்கின் அஹ்மத் 2 விக்கெட்டுகளையும், ரிஷாத் ஹொசைன் ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.