
சர்வதேச கிரிக்கெட்டை பொறுத்தவரை ஒரு சில வீரர்களுக்கு மட்டுமே எதிரணி வீரர்களும் ரசிகர்களாக இருப்பார்கள். விவியன் ரிச்சர்ஸ், சச்சின், எம் எஸ் தோனி, பிரையன் லாரா, ஏபி டில்லியர்ஸ் உள்ளிட்டோருக்கு பின் அந்த சிம்மாசனத்தில் விராட் கோலி மட்டுமே சம காலத்தில் அமர்ந்திருக்கிறார். விராட் கோலி எங்கு போனாலும் எதிரணி வீரர்களும் வந்து அவருடன் புகைப்படம் எடுத்துக் கொள்ள விருப்பமாக இருப்பார்கள்.
அந்த வகையில் வெஸ்ட் இண்டீஸ் சென்றுள்ள விராட் கோலியை சந்திக்க வெஸ்ட் இண்டீஸ் ஜாம்பவான் சோபர்ஸ் வந்திருந்தார். அதேபோல் பிரையன் லாரா சில நிமிடங்கள் சந்தித்து பேசி இருந்தார். இந்த நிலையில் நேற்றைய ஆட்டத்தின் போது, வெஸ்ட் இண்டீஸ் அணியின் ஜோஷ்வா சில்வா களத்திலேயே ரசிகராக செயல்பட்ட சம்பவம் இந்திய ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
நேற்றைய நாளின் போது விராட் கோலி , அதிவேகமாக ரன்களை ஓடி எடுத்துக் கொண்டிருந்தார். அப்போது ஜோஷ்வா சில்வா, "2012 முதல் நீங்கள் இதனை தான் செய்து கொண்டிருக்கிறார்கள். ஒரு ரன் சேர்க்க வேண்டிய இடத்தில், 2 ரன்களாக மாற்றிவிடுகிறீர்கள்" என்று பாராட்டினார். அதேபோல் விராட் கோலி 70 ரன்களை கடந்து விளையாடிய போது, "சதத்தை விளாசிவிடுங்கள்" விராட் என்று ஜோஷ்வா சில்வா அறிவுறுத்தியுள்ளார்.