
வங்கதேச மகளிர் அணி வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் செய்து மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் விளையாடி வருகிறது. இதில் நடைபெற்று முடிந்த இரு அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முடிவில் வெஸ்ட் இண்டீஸ் மகளிர் அணி 2-1 என்ற கணக்கில் வங்கதேச மகளிர் அணியை வீழ்த்தி தொடரை வென்றது. இதனையடுத்து இரு அணிகளுக்கும் இடையேயான டி20 தொடர் இன்று தொடங்கியது.
அந்தவகையில் வெஸ்ட் இண்டீஸ் - வங்கதேச மகளிர் அணிகளுக்கு இடையேயான முதல் டி20 போட்டி இன்று செயின்ட் கிட்ஸில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த வங்கதேச அணிக்கு திலாரா அக்தர் - சோபனா மோஸ்ட்ரி இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் திலாரா அக்தர் 12 ரன்களில் ஆட்டமிழக்க, அவரைத் தொடர்ந்து 22 ரன்களைச் சேர்த்த நிலையில் சோபனாவும் விக்கெட்டை இழந்தார். இதனையடுத்து ஜோடி சேர்ந்த ஷர்மின் அக்தர் மற்றும் கேப்டன் நிகர் சுல்தான இணை அதிரடியாக விளையாடி அணியை சரிவிலிருந்து மீட்டனர்.
இதில் இருவரும் இணைந்து 80 ரன்களுக்கு மேல் பார்ட்னர்ஷிப் அமைத்த நிலையில் ஷர்மின் அக்தர் 37 ரன்களில் விக்கெட்டை இழந்தாலும், மறுபக்கம் அதிரடியாக விளையாடிய நிகர் சுல்தான் அரைசதம் கடந்து அசத்தியதுடன் இறுதிவரை ஆட்டமிழக்காமல் 5 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் என 53 ரன்களைச் சேர்த்து அணிக்கு ஃபினிஷிங்கைக் கொடுத்தார். இதன்மூலம் வங்கதேச அணி 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்து 143 ரன்களைச் சேர்த்தது. வெஸ்ட் இண்டீஸ் அணி தரப்பில் ஃபிரேசர், கேப்டன் ஹீலி மேத்யூஸ், அஃபி ஃபிளெட்சர் தலா ஒரு விக்கட்டை கைப்பற்றினர்.