
இலங்கை - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி காலே மைதானத்தில் நடந்து முடிந்தது. இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி முதல் இன்னிங்ஸில் 305 ரன்களைச் சேர்த்த நிலையில் ஆல் அவுட் ஆனது. அந்த அணியில் அதிகபட்சமாக கமிந்து மெண்டிஸ் 114 ரன்களையும், குசால் மெண்டிஸ் 50 ரன்களைச் சேர்த்தனர். நியூசிலாந்து தரப்பில் வில்லியம் ஓ ரூர்க் 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
இதைத்தொடர்ந்து விளையாடிய நியூசிலாந்து அணி முதல் இன்னிங்சில் 340 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதில் அதிகபட்சமாக டாம் லதாம் 70 ரன்களௌயும், டேரில் மிட்செல் 57 ரன்களையும் சேர்த்தனர். இலங்கை சார்பில் பிரபாத் ஜெயசூர்யா 4 விக்கெட்டும், ரமேஷ் மெண்டிஸ் 3 விக்கெட்டும், தனஞ்செய டி சில்வா 2 விக்கெட்டும் வீழ்த்தினர். அதன்பின் 35 ரன்கள் பின்தங்கிய நிலையில் விளையாடிய இலங்கை அணி இரண்டாம் இன்னிங்ஸில் 309 ரன்கள் குவித்த நிலையில் ஆல் அவுட் ஆனது. இதில் கருணரத்னே 83 ரன்களும் சண்டிமால் 61 ரன்களும் அடித்தனர்.நியூசிலாந்து சார்பில் அஜாஸ் படேல் 6 விக்கெட் வீழ்த்தினார்.
அதன்பின், 275 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நியூசிலாந்து அணி களமிறங்கியது. இலங்கை அணியின் அபார பந்து வீச்சில் திணறிய நியூசிலாந்து அணி சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. ஒருபுறம் விக்கெட்கள் வீழ்ந்தாலும் அந்த அணியின் ரச்சின் ரவீந்திரா பொறுப்புடன் விளையாடி அரை சதம் கடந்தார். அதன்பின் 92 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ரச்சின் ரவீந்திராவும் விக்கெட்டை இழக்க, மற்ற வீரர்களாலும் ரன்களைச் சேர்க்க முடியவில்லை. இதனால் நியூசிலாந்து அணி 211 ரன்களில் சுருண்டது. இதன்மூலம் இலங்கை அணி 63 ரன்கள் வித்தியாசத்தியில் நியூசிலாந்தை வீழ்த்தி வெற்றிபெற்றது.