
பிசிசிஐ-ன் உயர்மட்ட அதிகாரிகளின் கூட்டம் நேற்று பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நடைபெற்றது. இதில் தலைவர் ரோஜர் பின்னி, ஜெய் ஷா, ரோகித் சர்மா, ராகுல் டிராவிட், வி.வி.எஸ்.லக்ஷ்மண் உள்ளிட்டோர் கலந்துக்கொண்டு ஆலோசனை நடத்தினார். இதில் அடுத்து வரக்கூடிய ஒருநாள் உலகக்கோப்பை தொடர் மற்றும் 2024ஆம் ஆண்டு வரவுள்ள டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர்களுக்காக என்னனென்ன மாற்றங்களை செய்ய வேண்டும் என ஆலோசிக்கப்பட்டது.
அதன் முடிவில் தான் வீரர்களின் உடற்தகுதி பிரச்சினைக்கு தீர்வு கொண்டு வரப்பட்டது. அதாவது அணியில் தற்போது காயத்தால் பாதிப்படையும் வீரர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. காயத்தினால் சில வீரர்கள் விலகியது தான் டி20 உலகக்கோப்பை தோல்விக்கு காரணம் என்றே கேப்டன் ரோஹித் சர்மா குற்றம்சாட்டியிருந்தார். இதற்காக தான் யோ - யோ டெஸ்டுடன் சேர்த்து தற்போது டெக்ஸா (DEXA) டெஸ்ட் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
காயமடைந்த வீரர்களின் உடற்தகுதியை பரிசோதிக்க யோ - யோ தேர்வு நடத்தப்படும். இது அவர்களின் செயல்பாடுகளுக்காக வைக்கப்படுவதாகும். ஆனால் தற்போது வந்திருக்கும் டெக்ஸா எக்ஸ்ரே போன்றதாகும். Dexa (Dual-energy X-ray absorptiometry) என்பது வீரரின் உடலில் உள்ள எலும்புகளில் தேவையான சத்துக்கள் உள்ளனவா? எலும்புகளுக்கு ஏற்ற உறுதியும் சக்திகளும் உள்ளனவா என்பதை ஸ்கேன் செய்வது ஆகும்.