
நியூசிலாந்து சென்றுள்ள இந்திய இளம் அணி மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்று விளையாடியது.இதில் முதல் போட்டி மழை காரணமாக ரத்தான நிலையில், இரண்டாவது டி20 போட்டி கடந்த நவம்பர் 20ஆம் தேதி நடைபெற்றது. இப்போட்டியில் முதலில் களமிறங்கிய இந்திய அணியில் சூர்யகுமார் யாதவ் காட்டடி அடித்து 51 பந்துகளில் 111 ரன்களை குவித்து அசத்தியதால், இந்தியா 191 ரன்களை குவித்து, 65 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பெற்றது.
இதனைத் தொடர்ந்து மூன்றாவது போட்டியில் 161 ரன்கள் இலக்கை துரத்தி களமிறங்கிய இந்திய அணி 9 ஓவர்களில் 75/4 என ரன்களை சேர்த்து விளையாடி வந்தபோது மழை குறுக்கிட்டது. அடுத்து, ஆட்டம் நடைபெறவே இல்லை. டிஎல்எஸ் விதிமுறைப்படி இரண்டு அணிகளும் 9 ஓவர்களில் 75 ரன்கள் என்ற சமமான ஸ்கோரில் இருந்ததால் ஆட்டம் டிரா என அறிவிக்கப்பட்டது.
இதன்மூலம் இந்திய அணி 1-0 என்ற கணக்கில் நியூசிலாந்தை வீழ்த்தி இந்த டி20 தொடரைக் கைப்பற்றியது. இந்நிலையில் பவுன்சருக்கு எதிராக திணறி வரும் ஷ்ரேயஸ் ஐயருக்கு வாய்ப்பு கொடுத்த நிலையில், வேகப்பந்து வீச்சுக்கு எதிராக அதிரடியாக விளையாடக் கூடிய சஞ்சு சாம்சனுக்கு இந்த டி20 தொடரில் வாய்ப்பு வழங்கப்படவில்லை.