
ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நடைபெற்று வந்த ஐபிஎல் தொடரின் 17ஆவது சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இத்தொடரின் இறுதி போட்டிக்கு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி முன்னேறியுள்ள நிலையில், அடுத்ததாக எந்த அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறும் என்பதை தீர்மானிக்கும் இரண்டாவது குவாலிஃபையர் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன.
இந்நிலையில் நடப்பு ஐபிஎல் தொடரின் தொடக்கத்தில் தடுமாற்றமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியானது, இரண்டாம் பாதி சீசனில் அபாரமாக விளையாடியதுடன் தொடர்ச்சியாக 6 வெற்றிகளை குவித்து யாரும் எதிர்பாராத வகையில் பிளே ஆஃப் சுற்றுக்கும் முன்னேறி அசத்தியது. ஆனாலும் எலிமினேட்டர் சுற்றில் ராஜஸ்தான் அணியிடம் 4 விக்கெட் வித்தியாசத்தில் அதிர்ச்சி தோல்வியைத் தழுவி கோப்பை வெல்லும் வாய்ப்பை மீண்டும் இழந்துள்ளது.
இந்நிலையில் இப்போட்டியுடன் ஐபிஎல் தொடரிலிருந்து ஓய்வு பெறுவதாக ஆர்சிபி அணியின் நட்சத்திர வீரர் தினேஷ் கார்த்திக் அறிவித்தார். இதனையடுத்து ஆர்சிபி அணி நிர்வாகம் தினேஷ் கார்த்திக்கிற்கு வாழ்த்து தெரிவிக்கும் வகையில் அணி வீரர்கள் அவர் குறித்து பேசிய காணொளியை வெளியிட்டுள்ளது. இதில் தான் தன்னம்பிக்கை இல்லாமல் போராடியபோது எனக்கு உதவியவர் தினேஷ் கார்த்திக் என்று விராட் கோலி தெரிவித்துள்ளார்.