
இளம் அதிரடி பேட்ஸ்மேன் ஸ்ரேயாஸ் ஐயர். இவர் கடந்த 2015ஆம் ஆண்டில்தான் முதல்முறையாக ஐபிஎல் தொடரில் பங்கேற்றார். டெல்லி கேபிடல்ஸ் அணி இவரை 2.6 கோடிக்கு ஏலம் எடுத்திருந்தது. இதனைத் தொடர்ந்து 2018ஆம் ஆண்டில் நடைபெற்ற ஐபிஎல் தொடரின்போது, சில தினங்களில் கௌதம் கம்பீர் கேப்டன் பதவியிலிருந்து நீக்கப்பட்டு, ஸ்ரேயஸ் ஐயருக்கு அந்த பதவி வழங்கப்பட்டது.
அடுத்த ஆண்டே டெல்லி அணியை பிளே ஆஃப் வரை அழைத்துச் சென்றார். 2020ஆம் ஆண்டில் இறுதிப் போட்டிவரை கூட்டிச் சென்று பெஸ்ட் கேப்டன் என்பதை நிரூபித்தார். ஆனால், அதன் பிறகுதான் தரமான சம்பவம் நடைபெற்றது. இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் போட்டியின்போது ஸ்ரேயஸுக்கு காயம் ஏற்பட்டதால், 2021 ஐபிஎல் தொடரின் முதல் பாதி ஆட்டங்களின்போது ரிஷப் பந்த் கேப்டனாக செயல்பட்டார்.
அடுத்து இரண்டாவது பாதி ஆட்டங்களின்போது ஸ்ரேயஸ் ஐயர் காயத்திலிருந்து குணமடைந்த நிலையில், வீரராக மட்டுமே நீடித்தார். இந்நிலையில், அடுத்த ஆண்டும் ரிஷப் பந்த்தான் கேப்டனாக இருப்பார் என தகவல் வெளியானது. இதனால், அதிருப்தியடைந்த ஸ்ரேயஸ் கேப்டனாக நியமித்தால் மட்டுமே டெல்லி அணியில் இருப்பேன், இல்லையென்றால் என்னை கேப்டனாக நியமிக்கும் அணிக்கு சென்றுவிடுவேன் எனத் திட்டவட்டமாக தெரிவித்துவிட்டதாகத் தகவல் வெளியானது.