
ஐபிஎல் 16ஆவது சீசன் இரண்டாவது வாரத்தில் இருந்து கடைசிப் பந்து வரை செல்லும் பரபரப்பான ஆட்டங்களைக் கொண்டு தனது வழக்கமான தீ போன்ற சுவாரசியத்தில் கிளம்பியது. நேற்று குஜராத் அகமதாபாத் மைதானத்தில் நடைபெற்ற குஜராத் மற்றும் ராஜஸ்தான் அணிகளுக்கு இடையேயான போட்டியும் இந்த சுவராசியத்திற்கு எந்தக் குறையும் இல்லாமல் ரசிகர்களுக்கு விருந்து படைப்பதாக அமைந்தது.
குஜராத் டைட்டன்ஸ் அணி பவர் பிளேவில் 42 ரன்களுக்கு இரண்டு விக்கெட்டுகளை இழந்து, பத்து ஓவர்களுக்கு 88 ரன்கள் இரண்டு விக்கெட்டுகள் என நிமிர்ந்து, பின்பு 20 ஓவர்கள் முடிவில் 177 ரன்களை ஏழு விக்கெட் இழப்புக்கு எடுத்தது. ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பவர் பிளேவில் 26 ரன்களுக்கு இரண்டு விக்கெட்டுகளை இழந்து, பத்து ஓவர்களுக்கு மூன்று விக்கெட் இழப்புக்கு 53 ரன்கள் என இக்கட்டான நிலையிலேயே இருந்தது. மேலும் 11ஆவது ஓவரில் நான்காவது விக்கெட்டாக ரியான் பராக்கும் வெளியேறிவிட்டார்.
இப்படியான நிலையில் ரஷித் கான் வீசிய 13ஆவது ஓவரில் ஹாட்ரிக் சிக்ஸர் அடித்து 20 ரன்களை சஞ்சு சாம்சன் எடுக்க ஆட்டம் அங்கிருந்து சூடு பிடித்தது. அடுத்து 15 ஓவர்களுக்கு ஐந்து விக்கெட்டுகள் 114 ரன்கள் என்று வந்தது. அடுத்து ஹெட்மையர் அதிரடியில் கலக்கி ஆட்டத்தை வெற்றிகரமாக ராஜஸ்தான் அணிக்கு முடித்துக் கொடுத்துவிட்டார்.