
வங்கதேச அணியுடனான 2வது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 5 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. இதனால் தொடரிலும் 2 - 0 என வங்கதேச அணி வெற்றி கண்டது. இந்த போட்டியில் முதலில் விளையாடிய வங்கதேச அணி 50 ஓவர்களில் 7 விக்கெட்கள் இழப்புக்கு 271 ரன்களை குவித்தது. இதன்பின்னர் ஆடிய இந்திய அணி 50 ஓவர்களில் 9 விக்கெட்களை இழந்து 266 ரன்களை மட்டுமே எடுத்து தோல்வியடைந்தது.
இந்தியா தோல்வியடைந்தாலும், கேப்டன் ரோஹித் சர்மாவின் ஆட்டம் ரசிகர்களுக்கு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஃபீல்டிங்கின் போது விரல்களில் காயமடைந்த ரோஹித் சர்மா, டாப் ஆர்டரில் பேட்டிங்கிற்கே வரவில்லை. கோலி, தவான் உள்ளிட்ட முக்கிய வீரர்கள் சொதப்பினர். கடைசி நேரத்தில் 44 பந்துகளில் 66 ரன்கள் தேவை, ஆனால் 8 விக்கெட் பறிபோனது என்ற இக்கட்டான சூழலில் 9வது வீரராக ரோஹித் சர்மா களத்திற்குள் வந்தார்.
கேப்டனாக காயத்தையும் பொருட்படுத்தாமல் வலியுடன் விளையாடிய ரோஹித் 28 பந்துகளில் 51 ரன்களை குவித்தார். கடைசி 2 பந்துகளில் 12 ரன்கள் தேவை என்ற போது, ஒரு பந்தில் சிக்ஸர் அடித்த அவர், அடுத்த பந்தை அடிக்கமுடியாமல் சிங்கிள் மட்டுமே எடுத்தார். வலியிலும் கடைசி வரை அணியை வெற்றி பாதைக்கு அழைத்துச் சென்ற ரோஹித் சர்மாவை எதிரணி வீரர்களும், ரசிகர்களுமே பாராட்டினர்.