
நடப்பு ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரின் நேற்று இங்கிலாந்து அணிக்கு எதிராக இந்திய அணி முதல் முறையாக முதலில் பேட்டிங் செய்தது. இதுவரை இந்த உலகக் கோப்பை தொடரில் இந்திய அணி ஐந்து முறை இரண்டாவது பேட் செய்து ஐந்து ஆட்டங்களையும் வென்று இருந்தது. எனவே நேற்று முதலில் பேட்டிங் செய்யும் போட்டி இந்திய அணிக்கு மிகவும் முக்கியமாக இருந்தது.
முதலில் பேட்டிங் செய்யும்பொழுது ஆடுகளத்திற்கு சரியான இலக்கு என்னவென்று தீர்மானித்து அதற்கேற்றபடி விளையாடி இலக்கை உருவாக்க வேண்டும். இதற்கடுத்து தருகின்ற இலக்குக்கு தகுந்தவாறு அணியின் பந்துவீச்சாளர்கள் செயல்பட்டு அணியை வெற்றி பெற வைக்க வேண்டும். இப்படியான புது சவால்கள் முதலில் பேட்டிங் செய்யும்பொழுது அணிக்கு உண்டு.
நேற்றைய போட்டியில் இந்திய பேட்ஸ்மேன்கள் ஆடுகளத்திற்கு சரியான ரன்களில் 30 ரன்கள் குறைவாகத்தான் எடுத்தார்கள். அதே சமயத்தில் இந்திய பந்துவீச்சாளர்கள், குறிப்பாக இந்திய வேகப்பந்துவீச்சாளர்கள் பும்ரா மற்றும் ஷமி இருவரும் உலகத் தரமான பந்துவீச்சை வெளிப்படுத்தி, இந்திய அணிக்கு வெற்றியை மிக எளிதாகக் கொண்டு வந்தார்கள்.