
இங்கிலாந்து அணி தற்சமயம் வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் செய்து 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. அதன்படி டி20 தொடரில் நடந்து முடிந்துள்ள 3 போட்டிகளின் முடிவில் இங்கிலாந்து அணி மூன்று போட்டிகளிலும் வெற்றிபெற்று 3-0 என்ற கணக்கில் வெஸ்ட் இண்டீஸை வீழ்த்தி தொடரை வென்றுள்ளது.
இதனைத்தொடர்ந்து வெஸ்ட் இண்டீஸ் - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான தொடரின் 4ஆவது டி20 போட்டியானது இன்று (நவ.17)செயின்ட் லூசியாவில் உள்ள டேரன் சமி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. இதையடுத்து களமிறங்கிய இங்கிலாந்து அணிக்கு பில் சால்ட் - வில் ஜேக்ஸ் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் இருவரும் இணைந்து ஆரம்பம் முதலே அதிரடியன ஆட்டத்தை வெளிப்படுத்தியதுடன், முதல் விக்கெட்டிற்கு 54 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தும் அசத்தினர்.
அதன்பின் 25 ரன்களைச் சேர்த்த நிலையில் வில் ஜேக்ஸ் தனது விக்கெட்டை இழக்க, மறுபக்கம் அரைசதம் கடந்து அசத்திய பில் சால்ட் 5 பவுண்டரி, 4 சிக்ஸர்கள் என 55 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். அவர்களைத் தொடர்ந்து களமிறங்கிய கேப்டன் ஜோஸ் பட்லர் தனது பங்கிற்கு 38 ரன்களைச் சேர்த்து ஆட்டமிழக்க, அடுத்து வந்த ஜேக்கப் பெத்தெல் இறுதிவரை ஆட்டமிழக்காமல் 4 பவுண்டரி, 5 சிக்ஸர்கள் என 62 ரன்களையும், சாம் கரண் 2 சிக்ஸர்களுடன் 24 ரன்களையும் சேர்க்க, இங்கிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 218 ரன்களைச் சேர்த்தது. விண்டீஸ் தரப்பில் குடகேஷ் மோட்டி 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.