
வங்கதேச அணி தற்சமயம் வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகளைக் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. அதன்படி இவ்விரு அணிகளுக்கும் இடையேயான முதல் டி20 போட்டி இன்று செயின்ட் வின்செண்ட்டில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்து வங்கதேச அணியை பேட்டிங் செய்ய அழைத்தது.
இதையடுத்து களமிறங்கிய வங்கதேச அணிக்கு தொடக்கம் சிறப்பானதாக அமையவில்லை. தொடக்க வீரராக களமிறங்கிய தன்ஸித் ஹசன் 6 ரன்னில் விக்கெட்டை இழக்க, அடுத்து கேப்டன் லிட்டன் தாஸும் முதல் பந்திலேயும் விக்கெட்டை இழந்தனர். அவர்களைத் தொடர்ந்து களமிறங்கிய அஃபிஃப் ஹொசைனும் 8 ரன்களுடன் ஆட்டமிழக்க, வங்கதேச அணி 30 ரன்களில் 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. பின்னர் ஜோடி சேர்ந்த சமீயா சர்க்கார் - ஜக்கார் இணை பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி விக்கெட் இழப்பை தடுத்ததுடன், தேவையான சமயத்தில் பவுண்டரிகளையும் அடித்து அணியின் ஸ்கோரை உயர்த்தினர்.
மேலும் இருவரும் இணைந்து 4ஆவது விக்கெட்டிற்கு 57 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த நிலையில் நிதானமாக விளையாடி வந்த ஜக்கார் அலி 27 ரன்னில் விக்கெட்டை இழந்தார். அதேசமயம் மறுபக்கம் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய சௌமியா சர்க்கார் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 2 பவுண்டரி, 3 சிக்ஸர்கள் என 43 ரன்களைச் சேர்த்து விக்கெட்டை இழந்தார். இதனையடுத்து ஜோடி சேர்ந்த மஹெதி ஹசன் மற்றும் ஷமின் ஹொசைன் இணை அணியை கரைசேர்க்கும் முயற்சியில் இறங்கினர். இதில் இருவரும் அதிரடியாக விளையாடி பவுண்டரிகளை விளாச அணியின் ஸ்கோரும் உயர்ந்தது.