
வங்கதேச அணி தற்சமயம் வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் செய்து 2 டெஸ்ட், 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டெஸ்ட் போட்டி நவம்பர் 17ஆம் தேதி ஆண்டிகுவாவில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
அதன்படி முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணியில் கேப்டன் கிரேய்க்பிராத்வைட் 4 ரன்னிலும், கேசி கார்டி ரன்கள் ஏதுமின்றியும், கேவன் ஹாட்ஜ் 25 ரன்னிலும் என விக்கெட்டுகளை இழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினர். பின்னர் ஜோடி சேர்ந்த மைக்கைல் லூயிஸ் - அலிக் அதனாஸ் இணை பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தின. மேலும் இருவரும் இணைந்து தங்கள் அரைசதங்களையும் பதிவுசெய்தனர்.
அதன்பின் சதமடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட மைக்கைல் லூயிஸ் 97 ரன்களைச் சேர்த்த கையோடு விக்கெட்டை இழக்க, அவரைத்தொடர்ந்து 90 ரன்கள் சேர்த்திருந்த் அலிக் அதானாஸும் 90 ரன்களுடன் விக்கெட்டை இழந்தார். பின்னர் களமிறங்கிய ஜஸ்டின் கிரீவ்ஸ் பொறுப்புடன் விளையாடியதுடன் இறுதிவரை ஆட்டமிழக்காமல் 115 ரன்களைச் சேர்த்து அசத்தினார். இதன்மூலம் வெஸ்ட் இண்டீஸ் அணி முதல் இன்னிங்ஸில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 450 ரன்களைச் சேர்த்து டிக்ளர் செய்தது.