
வங்கதேச அணி தற்சமயம் வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடந்து முடிந்த முதல் ஒருநாள் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணியானது அபாரமான வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியதுடன் 1-0 என்ற கணக்கில் தொடரிலும் முன்னிலைப் பெற்றுள்ளது.
இதனைத்தொடர்ந்து வெஸ்ட் இண்டீஸ் - வங்கதேச அணிகளுக்கு இடையேயான ஒருநாள் தொடரின் வெற்றியாளரைத் தீர்மானிக்கு இரண்டாவது ஒருநாள் போட்டியானது செயின்ட் கிட்ஸில் இன்று நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்து வங்கதேச அணியை பெட்டிங் செய்ய அழைத்தது. அதன்படி களமிறங்கிய வங்கதேச அணிக்கு தன்ஸித் ஹசன் மற்றும் சௌமீயா சர்க்கார் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் சௌமீயா சர்க்கார் 2 ரன்னில் விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தார்.
அவரைத் தொடர்ந்து களமிறங்கிய லிட்டன் தாஸ் 4 ரன்களுக்கும், கேப்டன் மெஹிதி ஹசன் மிராஸ் ஒரு ரன்னிலும் என விக்கெட்டுகளை இழந்து ஏமாற்றமளித்தனர். அதேசமயம் மறுபக்கம் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த தன்ஸித் ஹசனும் 4 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் என 46 ரன்னில் விக்கெட்டை இழக்க, அவருடன் இணைந்து விளையாடிய அஃபிஃப் ஹொசைனும் 24 ரன்களில் நடையைக் கட்டினர். இதையடுத்து வந்த மஹ்முதுல்லா ஒருபக்கம் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்த, மறுபக்கம் களமிறங்கிய ஜக்கர் அலி, ரிஷாத் ஹொசைன் ஆகியோரும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.