
வங்கதேச அணி தற்சமயம் வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடைபெற்று முடிந்த முதல் போட்டியில் வங்கதேச அணியானது வெற்றிபெற்று 1-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலைப் பெற்று அசத்தியுள்ளது.
இதனையடுத்து வெஸ் இண்டீஸ் - வங்கதேச அணிகளுக்கு இடையேயான டி20 தொடரின் வெற்றியாளரைத் தீர்மானிக்கும் இரண்டாவது டி20 போட்டி இன்று செயின்ட் வின்செண்டில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. இதனையடுத்து களமிறங்கிய வங்கதேச அணியில் கேப்டன் லிட்டன் தாஸ் மீண்டும் சொற்ப ரன்னில் விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தார். அவரைத் தொடர்ந்து களமிறங்கிய தன்ஸி ஹசன் 2 ரன்களுக்கும், மற்றொரு தொடக்க வீரர் சௌமீயா சர்க்கார் 11 ரன்களிலும் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர்.
பின்னர் ஜோடி சேர்ந்த மெஹிதி ஹசன் - ஜக்கார் அலி இணை பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தும் முயற்சியில் இறங்கினர். இதில் மெஹிதி ஹசன் 26 ரன்களுக்கும், ஜக்கார் அலி 21 ரன்களுக்கும் என விக்கெட்டை இழக்க, இறுதியில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய ஷமிம் ஹொசைன் 2 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் என 35 ரன்களைச் சேர்த்து அணிக்கு தேவையான ஃபின்ஷிங்கைக் கொடுத்தார். இதன்மூலம் வங்கதேச அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 129 ரன்களைச் சேர்த்தது. விண்டீஸ் தரப்பில் குடகேஷ் மோட்டி அதிகபட்சமாக 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.