
இங்கிலாந்து அணி தற்சமயம் வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரிலும், 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரிலும் விளையாடி வருகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான முதல் ஒருநாள் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணியானது 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியுள்ளது.
இதையடுத்து இரு அணிகளுக்கும் இடையேயான ஒருநாள் தொடரின் வெற்றியாளரைத் தீர்மானிக்கும் இரண்டாவது ஒருநாள் போட்டியானது நேற்று ஆண்டிகுவாவில் உள்ள சர் விவியன் ரிச்சர்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்றுள்ள இங்கிலாந்து அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்து வெஸ்ட் இண்டீஸ் அணியை பேட்டிங் செய்ய அழைத்தது. அதன்படி களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு பிராண்டன் கிங் - எவின் லூயிஸ் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் பிராண்டன் கிங் 7 ரன்னிலும், எவின் லூயிஸ் 4 ரன்னிலும் என விக்கெட்டை இழந்தனர்.
அதன்பின் ஜோடி சேர்ந்த கேசி கார்டி மற்றும் கேப்டன் ஷாய் ஹோப் இணை பொறுப்புடன் விளைடாடி அணியின் விக்கெட் இழப்பை தடுத்து நிறுத்தியதுடன், தேவைப்படும் நேரங்களில் பவுண்டரிகளையும் விளாசி அணியின் ஸ்கோரையும் உயர்த்தினர். இருவரும் இணைந்து தொடர்ந்து அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியதுடன் தங்கள் அரைசதங்களையும் பதிவுசெய்து அசத்தினர். இதன்மூலம் இருவரது பார்ட்னர்ஷிப்பும் 143 ரன்களாக உயர்ந்த நிலையில், 5 பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 72 ரன்களை எடுத்த கையோடு கேசி கார்டி தனது விக்கெட்டை இழந்தார்.