WI vs IND, 2nd T20I: பூரன் அதிரடி; பரபரப்பான ஆட்டத்தில் இந்தியாவை வீழ்த்தியது விண்டீஸ்!
இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி 2 விக்கெட் வித்தியாசத்தில் த்ரில் வெற்றியைப் பதிவுசெய்ததுடன் 2-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலைப் பெற்றுள்ளது.
வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடைபெற்ற முடிந்த முதலாவது டி20 போட்டியில் இந்திய அணி வெஸ்ட் இண்டீஸிடம் தோல்வியடைந்து 1-0 என்ற கணக்கில் தொடரில் பின்னடைவை சந்திந்துள்ளது.
இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது டி20 போட்டி இன்று கயானாவில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ஹர்திக் பாண்டியா முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்துள்ளார். இன்றைய போட்டிக்கான இந்திய அணியில் குல்தீப் யாதவிற்கு பதிலாக ரவி பிஷ்னோய் சேர்க்கப்பட்டார்.
Trending
இதையடுத்து இந்திய அணியின் தொடக்க வீரர்களாக இஷான் கிஷன் - ஷுப்மன் கில் இணை களமிறங்கினர். இதில் ஷுப்மன் கில் 7 ரன்களில் ஆட்டமிழக்க, அடுத்து களமிறங்கிய சூர்யகுமார் யாதவ் ஒரு ரன்னில் விக்கெட்டை இழந்து பெவிலியனுக்கு திரும்பினார். இதையடுத்து இணைந்த இஷான் கிஷன் - திலக் வர்மா இணை ஓரளவு தாக்குப்பிடித்து ஸ்கோரை உயர்த்தினர்.
அதன்பின் 27 ரன்களில் இஷான் கிஷான் விக்கெட்டை இழக்க, பின்னர் வந்த சஞ்சு சாம்சனும் 7 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். இருப்பினும் மறுபக்கம் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த திலக் வர்மா சர்வதேச டி20 கிரிக்கெட்டில் தனது முதல் அரைசதத்தைப் பதிவுசெய்து அசத்தினார்.
அதனைத்தொடர்ந்து 51 ரன்களுக்கு திலக் வர்மாவும், 24 ரன்களுக்கு கேப்டன் ஹர்திக் பாண்டியாவும் என விக்கெட்டுகளை இழந்தனர். இறுதியில் அக்ஸர் படேல், ரவி பிஷ்னோய், அர்ஷ்தீப் சிங் ஆகியோர் தங்களால் முடிந்த ரன்களைச் சேர்த்து அணிக்கு உதவினர். இதனால் இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடுவில் 7 விக்கெட் இழப்பிற்கு 152 ரன்களைச் சேர்த்தது.
இதையடுத்து இலக்கை நோக்கி களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு தொடக்கமே அதிர்ச்சி காத்திருந்தது. அணியின் தொடக்க வீரர் பிராண்டன் கிங் இன்னிங்ஸின் முதல் பந்திலேயும், அடுத்து களமிறங்கிய ஜான்சன் சார்லஸ் அதே ஓவரின் 4ஆவது பந்திலும் என அடுத்தடுத்து ஹர்திக் பாண்டியா பந்துவீச்சில் விக்கெட்டை இழந்தனர்.
அவர்களைத் தொடர்ந்து அதிரடியாக விளையாடிய மற்றொரு தொடக்க வீரர் கைல் மேயர்ஸும் 15 ரன்களுக்கு தனது விக்ஜெட்டை இழந்தார். இதையடுத்து ஜோடி சேர்ந்த நிக்கோலஸ் பூரன் - கேப்டன் ரோவ்மன் பாவெல் இணை அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தியதுடன், 50 ரன்களுக்கு மேல் பார்ட்னர்ஷிப்பும் அமைத்தனர்.
பின் 21 ரன்களில் ரோவ்மன் பாவெல் ஆட்டமிழக்க, மறுமுனையில் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அரைசதம் கடந்திருந்த நிக்கோலஸ் பூரன் 6 பவுண்டரி, 4 சிக்சர்கள் என 67 ரன்களைச் சேர்த்து விக்கெட்டை இழந்தார். அவரைத்தொடர்ந்து களமிறங்கிய ரொமாரியோ செஃபெர்ட், ஜேசன் ஹோல்டர் ஆகியோரும் ரன்கள் ஏதுமின்றி விக்கெட்டை இழந்து வந்த வேகத்தில் பெவிலியனுக்கு திரும்பினர்.
அதேசமயம் அணியின் நம்பிக்கையாக பார்க்கப்பட்ட ஷிம்ரான் ஹெட்மையர் 22 ரன்களில் விக்கெட்டை இழக்க, வெஸ்ட் இண்டீஸ் அணி கையிலிருந்த வெற்றி வாய்ப்பும் இந்தியா பக்கம் திரும்பியது. இருப்பினும் இறுதிவரை களத்தில் நின்று போராடிய அகீல் ஹொசைன் மற்றும் அல்ஸாரி ஜோசப் இணை அணிக்கு தேவையான ரன்களைச் சேர்த்து வெற்றியைத் தேடிக்கொடுத்தது.
இதன்மூலம் வெஸ்ட் இண்டீஸ் அணி 18.5 ஓவர்களில் இலக்கை எட்டி, 2 விக்கெட் வித்தியாசத்தில் த்ரில் வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது. இதில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த அகீல் ஹொசைன் 16 ரன்களையும், அல்ஸாரி ஜோசன் 10 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். இந்திய அணி தரப்பில் ஹர்திக் பாண்டியா 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.
இந்த வெற்றியின் மூலம் வெஸ்ட் இண்டீஸ் அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் 2-0 என்ற கணக்கில் முன்னிலைப் பெற்றுள்ளது.
Win Big, Make Your Cricket Tales Now