
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக நிறைவு பெற்ற 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரை 2 – 1 என்ற கணக்கில் இந்தியா வென்றது. 2023 உலகக் கோப்பையில் சந்தித்த தோல்விக்கு பின் விராட் கோலி போன்ற முதன்மை வீரர்கள் இல்லாமல் கேஎல் ராகுல் தலைமையில் இத்தொடரில் இளம் வீரர்களுடன் களமிறங்கிய இந்தியா 2018க்குப்பின் 2ஆவது முறையாக சவாலான தென் ஆப்பிரிக்க மண்ணில் ஒருநாள் தொடரை வென்று சாதனை படைத்துள்ளது.
முன்னதாக இத்தொடரின் வெற்றியாளரை தீர்மானிப்பதற்காக பார்ல் நகரில் நடைபெற்ற 3ஆவது போட்டியில் சஞ்சு சாம்சன் சதமடித்து 108 ரன்கள் விளாசி இந்தியா 78 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற உதவினார். கடந்த 2015இல் அறிமுகமான அவர் 8 வருடங்களாகியும் இதுவரை இந்திய அணியில் நிலையான வாய்ப்புகளை பெறாதது பலமுறை விமர்சனங்களையும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
ஆனால் தற்போது சர்வதேச கிரிக்கெட்டில் முதல் முறையாக சதமடித்து கால் தடம் பதித்துள்ள சஞ்சு சாம்சனுக்கு இனிமேலாவது தேர்வுக் குழுவினர் தொடர்ச்சியாக வாய்ப்புகளை கொடுக்க வேண்டும் என்று முன்னாள் வீரர் கௌதம் கம்பீர் கேட்டுக் கொண்டுள்ளார். குறிப்பாக மிடில் ஆர்டரில் விக்கெட் கீப்பராக விளையாடும் திறமை கொண்ட அவருக்கு 2027இல் தென் ஆப்பிரிக்காவில் நடைபெற உள்ள உலகக் கோப்பையில் விளையாட வாய்ப்பு கிடைக்கும் என்று நம்புவதாக கௌதம் கம்பீர் தெரிவித்துள்ளார்.