இந்திய அணியின் முன்னாள் கேப்டனான விராட் கோலி மூன்று வகையான கிரிக்கெட்டிலும் உலகின் தலைசிறந்த பேட்ஸ்மேனாக திகழ்ந்து வந்தார். சர்வதேச கிரிக்கெட்டில் 70 சதங்களை விளாசிய விராட் கோலி விரைவில் 100 சதங்களை எட்டி சச்சினின் சாதனையை முறியடிப்பார் என்றும் கிரிக்கெட் உலகின் மிகப்பெரிய ஜாம்பவானாக மாறுவார் என்றும் பலரும் தங்களது கருத்துக்களை வெளிப்படுத்தி வந்தனர். ஆனால் கடந்த 2019 ஆம் ஆண்டிற்கு பிறகு இதுவரை இரண்டு ஆண்டிற்கும் மேலாக சதம் அடிக்க முடியாமல் விராட் கோலி திணறி வருகிறார்.
அதோடு மட்டுமின்றி நடைபெற்று முடிந்த இங்கிலாந்து அணிக்கு எதிரான தொடரில் சொற்ப ரன்களில் ஆட்டம் இழந்த விராத் கோலிக்கு ஜிம்பாப்வே அணிக்கு எதிரான தொடரிலும் வாய்ப்பு மறுக்கப்பட்டது. அதோடு தற்போது நடைபெற்று வரும் ஆசிய கோப்பை தொடரில் விராட் கோலி திறம்பட செயல்படவில்லை என்றால் அவருக்கு டி20 உலக கோப்பையின் இடமும் கேள்விக்குறியாகும் என்று பல்வேறு தரப்பிலும் பேசப்பட்டது.
இந்நிலையில் ஜிம்பாப்வே அணிக்கு எதிரான தொடரில் ஓய்வளிக்கப்பட்ட விராத் கோலி தற்போது ஒரு சிறிய இடைவெளிக்குப் பின்னர் மீண்டும் ஆசிய கோப்பை தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறார். அதன்படி ஆசிய கோப்பை தொடரின் முதல் போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிராக களம் இறங்கிய விராட் கோலி சர்வதேச கிரிக்கெட்டில் நூறாவது டி20 போட்டியில் விளையாடி சாதனை படைத்தார். அதோடு இந்திய அணிக்காக மூன்று வகையான கிரிக்கெட்டிலும் 100 போட்டிகளில் பங்கேற்ற முதல் வீரர் என்ற சாதனையும் அவர் படைத்தார்.