-mdl.jpg)
ஐசிசியின் ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் அடுத்த மாதம் இந்தியாவில் நடைபெறவுள்ளது. அதன்படி ஆக்டோபர் 5ஆம் தேதி தொடங்கும் இத்தொடரின் இறுதிப்போட்டியானது நவம்பர் 19ஆம் தேதி நடைபெறவுள்ளது. இத்தொடரில் முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் இங்கிலாந்து அணியை எதிர்த்து நியூசிலாந்து அணி அகமதாபாத்தில் பலப்பரீட்சை நடத்தவுள்ளது.
10 நாடுகள் பங்கேற்கும் இப்போட்டியில் 48 ஆட்டங்கள் நடைபெறுகின்றன. இத்தொடரின் அரையிறுதி போட்டிகள் நவம்பர் 15ஆம் தெதி மும்பையிலும், நவம்பர் 16ஆம் தேதி கொல்கத்தாவிலும், இறுதி ஆட்டம் நவம்பர் 19ஆம் தேதி அகமதாபாதிலும் நடைபெறுகிறது. உலகக் கோப்பை தொடர் அடுத்த மாதம் தொடங்க உள்ள நிலையில் போட்டியில் பங்கேற்க அனைத்து அணிகளும் தயாராகி வருகின்றன.
இந்த நிலையில் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் சாம்பியன் பட்டம் வெல்லும் அணிக்கான பரிசுத்தொகையை ஐசிசி இன்று அறிவித்துள்ளது. அதன்படி உலகக்கோப்பை தொடரில் சாம்பியன் பட்டம் வெல்லும் அணிக்கு ரூ.33 கோடி பரிசாக வழங்கப்படும் என ஐசிசி அறிவித்துள்ளது. அதேசமயம் இறுதிப்போட்டியில் தோல்வியடையும் அணிக்கு ரூ.16.50 கோடியும், அரையிறுதியில் தோல்வியடையும் அணிக்கு சுமார் ரூ.6.50 கோடி பரிசாக வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.