
வங்கதேச மகளிர் அணி வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் செய்து மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் விளையாடி வருகிறது. இதில் இரு அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நடைபெற்று வரும் நிலையில், இதில் நடந்து முடிந்துள்ள முதல் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி அபார வெற்றியைப் பதிவுசெய்து 1-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலைப் பெற்றது.
இதனையடுத்து இன்று இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டியானது செயின்ட் கிட்ஸில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் மகளிர் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்து வங்கதேச அணியை பேட்டிங் செய்ய அழைத்தது. அதன்படி களமிறங்கிய வங்கதேச அணியில் டாப் ஆர்டர் வீராங்கனைகள் ஃபர்ஹானா ஹக் 18 ரன்களிலும், முர்ஷிதா கதும் 12 ரன்னிலும், ஷர்மின் அக்தர் 11 ரன்களிலும் என விக்கெட்டுகளை இழந்து ஏமாற்றமளித்தனர். இதனால் அந்த அணி 56 ரன்களில் 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.
பின்னர் களமிறங்கிய கேப்டன் நிகர் சுல்தானா சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி தனது அரைசத்தத்தைப் பதிவுசெய்து அசத்தினார். ஆனால் மறுபக்கம் களமிறங்கிய ஷோபனா 23 ரன்களையும், ஃபஹிமா கதும் 4 ரன்னிலும், ஷொர்னா அக்தர் 21 ரன்னிலும், ரபேயா கான் உள்ளிட்டோர் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். பின்னர் 68 ரன்கள் எடுத்திருந்த நிலையில் நிகர் சுல்தானா தனது விக்கெட்டை இழந்து பெவிலியன் திரும்பினார். இதனால் வங்கதேச அணி 48.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 184 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. விண்டீஸ் தரப்பில் கரிஷ்மா ரம்ஹாரெக் 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.