
இங்கிலாந்து மகளிர் அணி தற்சமயம் ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட் ஆஷஸ் தொடரில் விளையாடி வருகிறது. இதில் தற்சமயம் இரு அணிகளுக்கும் இடையேயான டி20 தொடர் நடைபெற்று வரும் நிலையில், முதல் போட்டியில் ஆஸ்திரேலிய மகளிர் அணி வெற்றிபெற்று அசத்தியதுடன் நடப்பு ஆஷஸ் தொடரையும் கைப்பற்றி அசத்தியுள்ளது. இதனையடுத்து ஆஸ்திரேலியா - இங்கிலாந்து மகளிர் அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டி20 போட்டி இன்று (ஜனவரி 23) நடைபெற்றது.
கான்பெர்ராவில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து மகளிர் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. இதனையடுத்து களமிறங்கிய ஆஸ்திரேலிய மகளிர் அணிக்கு பெத் மூனி அதிரடியான தொடக்கத்தை வழங்கினார். அதேசமயம் மற்ற டாப் ஆர்டர் வீரர்கள் ஜார்ஜியா வோல் 5 ரன்களுக்கும், போப் லிட்ச்ஃபீல்ட் 17 ரன்களுக்கும், எல்லிஸ் பெர்ரி 2 ரன்களுக்கும், அனபெல் சதர்லேண்ட் 18 ரன்களிலும் என விக்கெட்டை இழக்க, மறுமுனையில் அரைசதத்தை நெருங்கிய பெத் மூனியும் 44 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார்.
இதனையடுத்து ஜோடி சேர்ந்த கேப்டன் தஹ்லியா மெக்ராத் மற்றும் கிரேஸ் ஹாரிஸ் இணை அதிரடியாக விளையாடி அணியை வலுவான ஸ்கோரை நோக்கி அழைத்துச் சென்றனர். இதில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த தஹ்லியா மெக்ராத் 48 ரன்களையும், கிரேஸ் ஹாரிஸ் 2 பவுண்டரி, 3 சிக்ஸர்கள் என 35 ரன்களையும் சேர்த்து அணிக்கு தேவையான ஃபினிஷிங்கைக் கொடுத்தனர். இதன்மூலம் ஆஸ்திரேலிய அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 185 ரன்களைச் சேர்த்தது. இங்கிலாந்து தரப்பில் சார்லீன் டீன் 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.