
இங்கிலாந்து மகளிர் அணி தற்சமயம் ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஆஷஸ் கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. அதன்படி நடப்பு மகளிர் ஆஷஸ் கிரிக்கெட் தொடரில் இவ்விரு அணிகளும் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் டி20 தொடர்களிலும், ஒரே ஒரு டெஸ்ட் போட்டியை கொண்ட தொடரிலும் விளையாடி வருகிறது. இதில் ஒருநாள் மற்றும் டி20 தொடரை ஆஸ்திரேலிய மகளிர் அணி வென்றதுடன் ஆஷஸ் கோப்பையையும் கைப்பற்றியது.
இதையடுத்து இரு அணிகளுக்கும் இடையேயான டெஸ்ட் போட்டி இன்று மெல்போர்னில் உள்ள மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் தொடங்கியது. இதில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணிக்கு தொடக்கமே ஏமாற்றமளிக்கும் விதமாக மையா பௌச்சர் 5 ரன்னிலும், டாமி பியூமண்ட் 8 ரன்னிலும் என விக்கெட்டை இழந்தனர். அதன்பின் இணைந்த கேப்டன் ஹீதர் நைட் - நாட் ஸ்கைவர் பிரண்ட் இணை ஓரளவு தாக்குப்பிடித்து அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இதில் ஹீதர் நைட் 25 ரன்களில் ஆட்டமிழக்க, அடுத்து களமிறங்கிய சோபியா டங்க்லியும் 21 ரன்களில் விக்கெட்டை இழந்தனர்.
அதன்பின் களமிறங்கிய டேனியல் வைட் 22 ரன்னிலும், ஏமி ஜோன்ஸ் 3 ரன்னிலும், எக்லெஸ்டோன் ஒரு ரன்னிலும் என விக்கெட்டை இழந்த நிலையில் மறுமுனையில் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி அரைசதம் கடந்த கையோடு 51 ரன்களில் விக்கெட்டை இழந்தார். அதன்பின் களமிறங்கிய வீராங்கனைகளில் மெக்டொனால்ட் கெய் 15 ரன்களைச் சேர்த்ததை தவிர்த்து மற்ற வீராங்கனைகள் சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்தார். இதன்மூலம் இங்கிலாந்து மகளிர் அணி 170 ரன்களில் ஆல் அவுட்டானது. ஆஸ்திரேலிய அணி தரப்பில் அலானா கிங் 4 விக்கெட்டுகளையும், கிம் கார்த், டேர்சி பிரௌன் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.