WPL 2023 Auction: வீராங்கனைகள் ஏலம் நாளை தொடக்கம்!
மகளிர் கிரிக்கெட் வரலாற்றில் பெரும் முக்கியத்துவம் பெற்ற மகளிர் பிரிமீயர் லீக் தொடருக்கான ஏலம் நாளை மும்பையில் நடைபெறுகிறது.
மகளிர் பிரீமியர் லீக் தொடர் வரும் மார்ச் 4ஆம் தேதி தொடங்கி 26 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த போட்டிகள் அனைத்தும் மும்பையில் உள்ள பிரபோர்ன் மைதானத்திலும், டி ஓய் பட்டேல் மைதானத்திலும் நடைபெறும்.
இந்த தொடரில் மும்பை இந்தியன்ஸ், டெல்லி கேப்பிட்டல், பெங்களூர் , அகமதாபாத் , லக்னோ ஆகிய அணிகள் பங்கேற்கிறது. இதில் மும்பை, டெல்லி மற்றும் பெங்களூரு ஆகியவை ஐபிஎல் ஆடவர் அணிகளை வைத்துள்ள அதே நிர்வாகம் ஆகும். மகளிர் அணிகளை ஏலத்தில் விற்றது மூலம் பிசிசிஐக்கு 4669 கோடி ரூபாய் வருமானம் கிடைத்தது.
Trending
இந்நிலையில் இத்தொடருக்கான வீராங்கனைகள் ஏலம் நாளை நடைபெறவுள்ளது. மும்பையில் உள்ள நட்சத்திர விடுதியில் இந்திய நேரப்படி மதியம் 2.30 மணிக்கு இந்த ஏலம் தொடங்க உள்ளது. இதனை ஜியோ சினிமா செயலியில் நேரலையாக பார்க்கலாம். இந்த ஏலத்திற்காக உலகம் முழுவதும் 1525 வீராங்கனைகள் தங்களுடைய பெயரை பதிவு செய்து இருந்தார்கள்.
ஆனால் இறுதிப்பட்டியலில் மொத்தம் 409 வீராங்கனைகள் தான் இடம்பெற்று இருக்கிறார்கள். இதில் 246 வீராங்கனைகள் இந்தியாவைச் சேர்ந்தவர்கள். 163 வீராங்கனைகள் வெளிநாட்டை சேர்ந்தவர்கள் ஆகும். இந்த ஏலத்தில் அதிகபட்ச விலையாக 50 லட்சம் ரூபாய்க்கு 24 வீராங்கனைகள் தங்களுடைய பெயரை பதிவு செய்துள்ளார்கள்.
இதில் 14 வெளிநாட்டு வீராங்கனைகளும் 10 இந்திய வீராங்கனைகளும் இடம்பெற்றுள்ளனர். இந்தியாவின் நட்சத்திர வீராங்கனைகளான ஹர்மன்பிரித் கவுர், ஸ்மிருதி மந்தனா, தீப்தி சர்மா, அண்டர் 19 உலக கோப்பையை வென்ற ஷஃபாலி வெர்மா போன்ற இந்திய வீராங்கனைகள் அதிக விலைக்கு செல்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
அலிசா ஹெலி, எல்லிஸ் பேர்ரி, சோபி எஸ்லெஸ்டோன், சோபி டிவைன் போன்ற வெளிநாட்டு வீராங்கனைகளும் தங்களுடைய விலையை அதிகபட்ச தொகையாக 50 லட்சம் ரூபாய்க்கு பதிவு செய்து இருக்கிறார்கள். ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூசிலாந்து, தென் ஆப்பிரிக்கா வெஸ்ட் இண்டீஸ் உள்ளிட்ட நாடுகளில் இருந்து வீராங்கனைகள் அதிகளவில் இறுதிப் பட்டியலில் இடம் பிடித்திருக்கிறார்கள்.
ஒவ்வொரு மகளிர் அணியும் ஏலத்தில் அதிகபட்சமாக 12 கோடி ரூபாய் வரை வீராங்கனைகளை ஏலத்தில் எடுக்க செலவிடலாம். ஒவ்வொரு அணியும் குறைந்தபட்சம் 15 வீராங்கனைகளாகவும், அதிகபட்சம் 18 வீராங்கனைகளையும் தேர்வு செய்ய வேண்டும். நாளை நடைபெறும் இந்த ஏலத்தில் அதிகபட்சமாக 90 வீராங்கனைகள் ஏலத்தில் தேர்வு செய்யப்படலாம்.
ஒவ்வொரு அணிகளும் அதிகபட்சமாக 5 வெளிநாட்டு வீராங்கனைகளை பிளேயிங் லெவனில் தேர்வு செய்யலாம். ஆனால் இது ஒரு ட்விஸ்ட் உள்ளது. இதில் நான்கு வெளிநாட்டு வீராங்கனைகள் முக்கிய உறுப்பினர் நாடுகளை சேர்ந்தவர்களாகவும், ஒரு வீராங்கனை அசோசியேட் உறுப்பினர்களை சேர்ந்தவர்களாகவும் இருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
Win Big, Make Your Cricket Tales Now