
ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வரும் மகளிர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரானது நாளுக்கு நாள் ரசிகர்களின் எதிர்பார்ப்புகளை அதிகரித்து வருகிறது. அதன்படி இத்தொடரில் இன்று நடைபெற்ற 6ஆவது லீக் ஆட்டத்தில் இங்கிலாந்து மற்றும் வங்கதேச மகளிர் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.
ஷார்ஜா சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. அதன்படி களமிறங்கிய அந்த அணிக்கு மையா பௌச்சர் - டேனியல் வையட் இணை தொடக்கம் கொடுத்தனர். இருவரும் தொடக்கம் முதலே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதுடன் முதல் விக்கெட்டிற்கு 48 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அசத்தினர். அதன்பின் 23 ரன்களை எடுத்திருந்த நிலையில் மையா பௌச்சர் விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய நாட் ஸ்கைவர், கேப்டன் ஹீதர் நைட் ஆகியோர் சொற்ப ரன்களுக்கு விக்கெட்டை இழந்தனர்.
அவர்களைத் தொடர்ந்து மறுமுனையில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த டேனியல் வையட் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 41 ரன்களில் விக்கெட்டை இழந்து வாய்ப்பை தவறவிட்டார். அதன்பின் களமிறங்கிய இங்கிலாந்து அணி வீராங்கனைகளால் வங்கதேச அணியின் பந்துவீச்சுக்கு ஈடுகொடுக்க முடியாமல் அடுத்தடுத்து சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்தனர். இதனால் இங்கிலாந்து அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 118 ரன்களை மட்டுமே சேர்த்தது. வங்கதேச அணி தரப்பில் நஹிதா அக்தர், ஃபஹிமா கதுன் மற்றும் ரிது மோனி ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.