
ஐசிசி மகளிர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் நடப்பு சீசன் ஐக்கிய அரபு அமீரகத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இத்தொடரில் தனது முதல் ஆட்டத்தில் நியூசிலாந்து அணியிடம் மோசமான தோல்வியை தழுவிய இந்திய அணி, நேற்றைய தினம் தனது இரண்டாவது லீக் போட்டியில் பாகிஸ்தானை எதிர்கொண்டது.
துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய பாகிஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 105 ரன்கள் அடித்துள்ளது. அந்த அணியில் அதிகபட்சமாக நிதா தார் 28 ரன்களைச் சேர்த்தார். இந்திய அணி தரப்பில் அருந்ததி ரெட்டி 3 விக்கெட்டுகளையும், ஸ்ரேயங்கா பாட்டீல் 2 விக்கெட்களையும் வீழ்த்தினர்.
அதன் பின்னர் இலக்கை நோக்கி களமிறங்கிய இந்திய அணியில் ஸ்மிருது மந்தனா 7 ரன்களில் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினார். அதேசமயம் அணியின் மற்றொரு தொடக்க வீராங்கனை ஷஃபாலி வர்மா 32 ரன்களையும், ஜெமிமா ரோட்ரிக்ஸ் 23 ரன்களையும், கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் 29 ரன்களையும் சேர்க்க, இந்திய மகளிர் அணி 18.5 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன், 6 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தி முதல் வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது.