
ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்றும் வரும் ஐசிசி மகளிர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரானது நாளுக்கு நாள் ரசிகர்களின் ஆர்வத்தை அதிகரித்து வருகிறது. இத்தொடரில் ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான இந்திய அணி நியூசிலாந்துக்கு எதிரான முதல் லீக் ஆட்டத்திலேயே அதிர்ச்சி தோல்வியைத் தழுவியது.
அதன்பின் பாகிஸ்தான் மகளிர் அணிக்கு எதிரான இரண்டாவது லீக் போட்டியில் இந்திய மகளிர் அணியானது அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியதுடன், நடப்பு மகளிர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் தங்களது முதல் வெற்றியைப் பெற்றது. இதனைத்தொடர்ந்து இன்று நடைபெறும் லீக் போட்டியில் இலங்கை மகளிர் அணியை எதிர்த்து இந்திய மகளிர் அணியானது பலப்பரீட்சை நடத்தவுள்ளது.
இதில் இலங்கை அணியானது ஏற்கெனவே இந்தாண்டு நடைபெற்ற மகளிர் ஆசிய கோப்பை இறுதிப்போட்டியில் இந்திய அணியை வீழ்த்தியதுடன் சாம்பியன் பட்டத்தையும் வென்று சாதனை படைத்திருந்தது. மேற்கொண்டு அந்த அணி விளையாடிய இரண்டு லீக் போட்டிகளிலும் தோல்வியைத் தழுவியதன் காரணமாக, இப்போட்டியில் கட்டாயம் வெற்றிபெற்றாக வேண்டிய கட்டாயத்தில் விளையாடவுள்ளதால், நிச்சயம் அதற்காக கடுமையாக போராடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.