
ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வந்த ஐசிசி மகளிர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் நடப்பு சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இத்தொடரின் இறுதிப்போட்டிக்கு லாரா வோல்வார்ட் தலைமையிலான தென் ஆப்பிரிக்க அணியும், சோஃபி டிவைன் தலைமையிலான நியூசிலாந்து அணிகளும் முன்னேறின.
அந்தவகையில் துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இந்த இறுதிப்போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க மகளிர் அணியானது முதலில் பந்துவீசுவதாக அறிவித்து நியூசிலாந்தை பேட்டிங் செய்ய அழைத்தது. இதையடுத்து களமிறங்கிய நியூசிலாந்து அணிக்கு சூஸி பேட்ஸ் மற்றும் ஜார்ஜியா பிளிம்மர் இணை தொடக்கம் கொடுத்தனர். இருவரும் தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடும் முயற்சியில் இறங்கினர். இதில் ஜார்ஜியா பிளிம்மர் 9 ரன்களி மட்டுமே எடுத்திருந்த நிலையில் விக்கெட்டை இழந்து பெவிலியன் திரும்பினார்.
அதன்பின் சூஸி பேட்ஸுடன் இணைந்த அமெலியா கெர் அபாராமான ஆட்டத்தை வெளிப்படுத்தியதுடன் அணியின் ஸ்கோரையும் மளமளவென உயர்த்தினர். அதன்பின் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட சூஸி பேட்ஸ் 32 ரன்களில் விக்கெட்டை இழக்க, அடுத்து வந்த கேப்டன் சோஃபி டிவைனும் 6 ரன்களுடனும் விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தார். பின்னர் களமிறங்கிய புரூக் ஹாலிடே வழக்கம் போல் தனது அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தியதுடன் அடுத்தடுத்து பவுண்டரிகளை விளாசி அணியின் ஸ்கோரையும் உயர்த்தினார்.