
ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்றும் வரும் ஐசிசி மகளிர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரானது நாளுக்கு நாள் ரசிகர்களின் ஆர்வத்தை அதிகரித்து வருகிறது. இதில் இன்று நடைபெற்ற 11ஆவது லீக் ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா மற்றும் ஸ்காட்லாந்து மகளிர் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.
துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க மகளிர் அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. அதன்படி களமிறங்கிய தென் ஆப்பிரிக்க மகளிர் அணிக்கு கேப்டன் லாரா வோல்வார்ட் மற்றும் தஸ்மின் பிரிட்ஸ் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் தஸ்கின் பிரிட்ஸ் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்திய நிலையில், மறுபக்கம் லாரா வோல்வார்ட் அடுத்தடுத்து பவுண்டரிகளை விளாசி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினார். இதன்மூலம் இருவரது பார்ட்னர்ஷிப்பும் 64 ரன்களை எட்டியது.
அப்போது அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட லாரா வோல்வார்ட் 5 பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 40 ரன்களைச் சேர்த்து விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய அன்னேக் போஷ் 11 ரன்களுடன் நடையைக் கட்டினார். பின்னர் தஸ்மின் பிரிட்ஸுடன் இணைந்த மரிஸான் கேப்பும் அதிரடியில் மிரட்ட அணியின் ஸ்கோரும் உயர்ந்தது. அதன்பின் இருவரும் அரைசதத்தை நெருங்கிய நிலையில் தஸ்மின் பிரிட்ஸ் 5 பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 43 ரன்களையும், மரிஸான் கேப்டன் 6 பவுண்டரிகளுடன் 43 ரன்களையும் சேர்த்து ஆட்டமிழந்தனர்.