மகளிர் டி20 உலகக்கோப்பை 2024: ஆஸ்திரேலியாவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது தென் ஆப்பிரிக்கா!
மகளிர் டி20 உலகக்கோப்பை: ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான அரையிறுதி போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று, இரண்டாவது முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறி சாதனை படைத்துள்ளது.
ஐசிசி மகளிர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் நடப்பு சீசன் ஐக்கிய அரபு அமீரகத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மொத்தம் 10 அணிகள் பங்கேற்ற இத்தொடரின் இறுதிப்போட்டிக்கு குரூப் ஏ பிரிவில் இருந்து ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து அணிகளும், குரூப் பி பிரிவில் இருந்து தென் ஆப்பிரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளும் முன்னேறின.
இந்நிலையில் இத்தொடரின் முதல் அரையிறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியா மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகள் பலப்பரீட்சை நடத்தின. துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. அதன்படி களமிறங்கிய ஆஸ்திரேலிய அணிக்கு கிரேஸ் ஹாரிஸ் மாற்றும் பெத் மூனி இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் கிரேஸ் ஹாரிஸ் 3 ரன்களில் விக்கெட்டை இழக்க, அடுத்து வந்த ஜார்ஜியா வர்ஹேமும் 5 ரன்களை மட்டுமே எடுத்த நிலையில் விக்கெட்டை இழந்து நடையைக் கட்டினார்.
Trending
பின்னர் இணைந்த பெத் மூனி மற்றும் கேப்டன் தஹ்லியா மெக்ராத் இணை நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தும் முயற்சியில் இறங்கினர். இருவரும் இணைந்து மூன்றாவது விக்கெட்டிற்கு 50 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த நிலையில் 27 ரன்களை எடுத்திருந்த தஹ்லியா மெக்ராத் தனது விக்கெட்டை இழந்து பெவிலியன் திரும்பினார். அவரைத்தொடர்ந்து மறுபக்கம் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அரைசதத்தை நெருங்கிய பெத் மூனி 44 ரன்களைச் சேர்த்திருந்த நிலையில் ஆட்டமிழந்து அரைசதம் அடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார்.
இறுதியில் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்திய எல்லிஸ் பெர்ரியும் 31 ரன்களுக்கு ஆட்டமிழக்க, அவருடன் இணைந்து விளையாடிய போஃப் லிட்ச்ஃபீல்டும் 16 ரன்களைச் சேர்த்து அணிக்கு தேவையான ஃபினிஷிங்கை கொடுத்தார். இதன்மூலம் ஆஸ்திரேலிய மகளிர் அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 134 ரன்களைச் சேர்த்தது. தென் ஆப்பிரிக்க அணி தரப்பில் அயபொங்கா காகா 2 விக்கெட்டுகளையும், மரிஸான் கேப்டன், மலபா ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றி அசத்தினர். இதனையடுத்து 135 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி தென் ஆப்பிரிக்க அணி களமிறங்கியது.
அதன்படி இன்னிங்ஸைத் தொடங்கிய அந்த அணிக்கு கேப்டன் லாரா வோல்வார்ட் மற்றும் தஸ்மின் பிரிட்ஸ் இணை அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்து அணிக்கு தேவையான அடித்தளத்தை அமைத்து கொடுத்தனர். இதில் அதிரடியாக தொடங்கிய தஸ்மின் பிரிட்ஸ் 15 ரன்னில் விக்கெட்டை இழந்து பெவிலியன் திரும்பினார். அதன்பின் லாரா வோல்வார்ட்டுடன் இணைந்த அன்னேக் போஷ்க்கும் அதிரடியாக விளையாட அணியின் ஸ்கோரும் மளமளவென உயர்த்தொடங்கியது. தொடர்ந்து அதிரடியாக விளையாடிய போஷ்க் தனது அரைசதத்தையும் பதிவுசெய்து அணியின் வெற்றியை உறுதிசெய்தார்.
Also Read: Funding To Save Test Cricket
அதேசமயம் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட லாரா வோல்வார்ட் 3 பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 42 ரன்களில் விக்கெட்டை இழக்க, மறுமுனையில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த அன்னேக் போஷ் 8 பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 74 ரன்களைச் சேர்த்து அணியை வெற்றிபெற செய்தார். இதன்மூலம் தென் ஆப்பிரிக்க அணியானது 18.1 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன் 8 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரெலிய அணியை வீழ்த்தியதுடன், தொடர்ச்சியாக இரண்டாவது முறை இறுதிப்போட்டிக்கு முன்னேறி சாதனை படைத்துள்ளது.
Win Big, Make Your Cricket Tales Now