
ஐபிஎல் தொடரில் 3 முறை கோப்பையை வென்று சாம்பியன் அணியாக திகழும் சிஎஸ்கே அணி, கடந்த சீசனில் முதல் முறையாக பிளே ஆஃபிற்கு முன்னேறாமல் வெளியேறியது. ஆனால் இம்முறை மீண்டும் பழைய சிஎஸ்கேவை போல் அபாரமாக ஆடி வெற்றிகளை குவித்து, முதல் அணியாக பிளே ஆஃபிற்கு முன்னேறியுள்ளது.
சிஎஸ்கே அணி வெற்றிகரமான அணியாக திகழ, தோனி, ரெய்னா, ஜடேஜா, பிராவோ ஆகிய வீரர்கள் முக்கியமான காரணம். ஆரம்பத்திலிருந்தே சிஎஸ்கே அணிக்காக ஆடும் இந்த வீரர்கள், பல ஆண்டுகளாக தொடர்ச்சியாக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி சென்னை அணியின் செல்லப்பிள்ளைகளாக திகழ்கின்றனர்.
கடந்த சீசனில் ரெய்னா ஆடாததால் தான், சிஎஸ்கே அணி பிளே ஆஃபிற்கு முன்னேற முடியாமல் போய்விட்டது என்று ரசிகர்கள் பலர் வேதனைப்பட்டனர். ஆனால் இந்த சீசனில் ரெய்னா விளையாடியும் எந்த பயனும் இல்லை எனுமளவிற்குத்தான் அவரது ஆட்டம் உள்ளது. ஆனால் சிஎஸ்கே அணி சிறப்பாக செயல்பட்டு வெற்றிகளை குவித்துக்கொண்டுதான் இருக்கிறது.