
இந்தியாவில் நடைபெற்று வரும் ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் இந்திய அணி நேற்று தனது முதல் போட்டியில் ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் விளையாடியது. இந்தப் போட்டி ஒட்டுமொத்தமாக பார்வையாளர்களுக்கு மிகச் சிறப்பான அனுபவமாக அமைந்தது. பேட்டிங் செய்ய கொஞ்சம் கடினமாக இருந்த காரணத்தினால் ஆட்டத்தில் சுவாரசியம் ஏகத்துக்கும் இருந்தது.
டேவிட் வார்னர் மற்றும் ஸ்மித் இருவரும் மிகப் பொறுமையாக விளையாடியது போல தெரிந்தாலும் கூட ஆடுகளத்திற்கு தகுந்தவாறு விளையாடிய அடித்தளத்தை மிக அருமையாக அமைத்துக் கொண்டு வந்தார்கள். ஆனால் இந்திய சுழற் பந்துவீச்சாளர்கள் ஒட்டுமொத்தமாக அதை தகர்த்து விட்டார்கள். அதே சமயத்தில் ஆஸ்திரேலியாவின் வேகப்பந்துவீச்சாளர்கள் இந்தியாவின் துவக்க டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்களுக்கு பெரிய அச்சுறுத்தலை கொடுத்தார்கள்.
ஸ்கோர் போர்டில் இரண்டு ரன்கள் இருக்கும்பொழுது இந்தியாவின் 3 விக்கெட்டுகள் பெவிலியன் போய்விட்டது. அடித்தது 199 ரன்கள் என்றாலும் அவர்கள் ஆட்டத்திற்குள் திரும்ப வந்த வேகம் அபாரமாக இருந்தது. போட்டியை பார்த்த யாரும் அந்த நிலையில் இந்திய அணி வெல்லும் என்று உறுதியாக நம்பி இருக்க முடியாது. உலகக் கோப்பை என்றாலே ஆஸ்திரேலியா அசுரத்தனமாக கிளம்பும் என்பதற்கு சாட்சியாக நேற்றும் அப்படியே இருந்தது.