இம்முறை தங்களிடமும் நிறைய சுழற் பந்துவீச்சு படை உள்ளது - பாட் கம்மின்ஸ் வார்னிங்!
இந்திய அணியை அதன் சொந்த மண்ணில் வீழ்த்துவது மிகவும் கடினமான விஷயம் என்று ஆஸ்திரேலியா டெஸ்ட் கிரிக்கெட் அணி கேப்டன் பாட் கம்மின்ஸ் தெரிவித்துள்ளார்.
நான்கு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்பதற்காக ஆஸ்திரேலிய அணி இந்தியாவுக்கு வந்துள்ளது. தற்போது பெங்களூருவில் தீவிரப் பயிற்சியில் ஈடுபட்டு வரும் ஆஸ்திரேலிய அணி, 9ஆம் தேதி நாக்பூரில் முதல் டெஸ்டில் பங்கேற்கிறது.
இதுவரை இந்தியா கடைசியாக விளையாடிய 10 ஆண்டுகளில் இரண்டே இரண்டு டெஸ்ட் போட்டிகளில் தான் தோல்வியை தழுவி இருக்கிறது. மேலும் 2012 ஆம் ஆண்டுக்கு பிறகு எந்த ஒரு டெஸ்ட் தொடரையும் இந்திய அணி தனது சொந்த மண்ணில் கோட்டை விட்டது கிடையாது.
Trending
இது குறித்து பேசிய ஆஸ்திரேலிய அணி கேப்டன் பாட் கம்மின்ஸ், “இந்தியாவில் டெஸ்ட் போட்டி விளையாடுவது மிகவும் கடினமான விஷயம். ஏனென்றால் அவர்களுடைய ரெகார்ட் அவர்கள் சொந்த மண்ணில் மிகவும் பிரமாதமாக இருக்கிறது. நிச்சயம் இது எங்களுக்கு பெரிய சவாலாக இருக்கும். இம்முறை தங்களிடமும் நிறைய சுழற் பந்துவீச்சு படை உள்ளது.
எங்களுடைய ஆஸ்திரேலிய அணியில் நான்கு சுழற் பந்துவீச்சாளர்கள் இருக்கிறார்கள். இவர்கள் அனைவரும் அனைத்து விதமான சுழற் பந்து வீச்சையும் வீசக்கூடியவர்கள். 20 விக்கெட்டுகளை வீழ்த்தக்கூடிய தகுதி உடைய பந்துவீச்சாளர்களை மட்டுமே பிளேயிங் லெவனில் களம் இறக்குவோம். ஆனால் அது யார் என்று இன்னும் நாங்கள் முடிவு செய்யவில்லை. நாங்கள் நாக்பூர் சென்றவுடன் அங்கு ஆடுகளம் எப்படி இருக்கிறது என்பதை பார்த்து பிறகு முடிவு செய்வோம்.
எங்கள் அணியில் ஏஸ்டன் எகார் போன்ற வீரர்கள் இருக்கிறார்கள். எங்களுடைய கடைசி தொடரில் முர்பியும் விளையாடி இருக்கிறார். நாதன் லியானுக்கு தேவையான ஆதரவை கொடுக்கும் வகையில் சுழற் பந்துவீச்சாளர்கள் தற்போது இருக்கிறார்கள். இதேபோன்று நடு வரிசையில் களமிறங்கும் பேட்ஸ்மேன் டிராவிஸ் ஹெட்டும் சுழல் பந்து வீசுவார்.எனவே இம்முறை எங்களுக்கு பலவிதமான சுழற் பந்துவீச்சாளர்கள் அணியில் இருக்கிறார்கள். எங்களுடைய பந்துவீச்சாளர்களை இன்னும் நாங்கள் தேர்வு செய்யவில்லை.
சுழற் பந்துவீச்சாளர் பத்தி பேசிவிட்டு வேகப்பந்துவீச்சை மறந்துவிடக்கூடாது. ஏனென்றால் எங்களுடைய அணியின் வேகப்பந்துவீச்சாளர்கள் அனைத்து விதமான ஆடுகளங்களிலும் சிறப்பாக பந்து வீசுவார்கள். நாங்கள் சிட்னியில் விளையாடிய போட்டிகளில் கூட வேகப்பந்துவீச்சுக்கு சாதகமான ஆடுகளம் அமைக்கப்படவில்லை.
ஆனால் அதிலும் நாங்கள் சிறப்பாக பந்துவீசி விக்கெட்டுகளை வீழ்த்தினோம் என்பதை மறந்து விடக்கூடாது. என்னுடைய முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி இந்தியாவில் தான். இங்கு தான் நான் அறிமுகமானேன்.ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது இந்தியாவுக்கு மீண்டும் வந்துள்ளேன். டெஸ்ட் கிரிக்கெட்டில் நான் எந்த இடத்தை பிடிக்க வேண்டும் என்பது குறித்து யோசித்து வைத்திருக்கிறேன். கேப்டனாக என்னுடைய பயணத்தை நான் மகிழ்ச்சியாக எதிர்கொள்கிறேன். எனக்கு இருக்கும் காயங்களைப் பற்றி நான் கவலைப்படவில்லை .
இந்தியாவுக்கு எதிரான தொடரில் நிச்சயம் கடுமையாக உழைத்தால் மட்டுமே விக்கெட்டுகள் கிடைக்கும் என்ற சவாலை இரு கரங்கள் கொண்டு நாங்கள் ஏற்கிறோம். இந்தியாவுக்கு எப்போது வந்தாலும் சுழற் பந்துவீச்சு குறித்து தான் அனைவரும் பேசுவார்கள். ஆனால் என்னை பொறுத்தவரை நீங்கள் விக்கெட்டுக்காக கடுமையாக போராடி சவால்களை ஏற்க வேண்டும்.வேகப்பந்துவீச்சாளர்கள் விக்கெட்களை எடுக்கவில்லை என்றால் கூட தொடர்ந்து நெருக்கடி ஏற்படுத்தும் வகையில் வீசினால் போதுமானது” என்று தெரிவித்துள்ளார்.
Win Big, Make Your Cricket Tales Now