WPL 2023: கேப்பிட்டல்ஸை வீழ்த்தி ஹாட்ரிக் வெற்றியைப் பதிவுசெயது மும்பை இந்தியன்ஸ்!
டெல்லி கேப்பிட்டல்ஸுக்கு எதிரான மகளிர் பிரீமியர் லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்துள்ளது.
மகளிர் பிரீமியர் லீக் தொடர் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. இதுவரை விளையாடிய 2 போட்டிகளிலும் வெற்றி பெற்று புள்ளி பட்டியலில் டாப் 2 இடங்களில் இருக்கும் மும்பை இந்தியன்ஸ் மற்றும் டெல்லி கேப்பிட்டல்ஸ் ஆகிய 2 அணிகளும் இன்றைய போட்டியில் விளையாடின. மும்பை டி.ஒய் பாட்டீல் ஸ்டேடியத்தில் நடந்துவரும் இந்த போட்டியில் டாஸ் வென்ற டெல்லி கேபிடள்ஸ் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.
முதலில் பேட்டிங் செய்த டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியில் தொடக்க வீராங்கனையும் கேப்டனுமான மெக் லானிங் மட்டுமே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 43 ரன்கள் அடித்தார். அவரைத்தவிர மற்ற அனைவருமே சொற்ப ரன்களுக்கு சீரான இடைவெளியில் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். மும்பை இந்தியன்ஸ் அணியில் அபாரமாக பந்துவீசிய சைகா இஷாக், இசி வாங், ஹைலி மேத்யூஸ் ஆகிய மூவரும் தலா 3 விக்கெட் வீழ்த்தினர்.மளமளவென விக்கெட்டுகளை இழந்த டெல்லி கேபிடள்ஸ் அணி 18 ஓவரில் வெறும் 105 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
Trending
இதையடுத்து 106 ரன்கள் என்ற எளிய இலக்கை விரட்டிய மும்பை இந்தியன்ஸ் அணிக்கு அணிக்கு யஷ்திகா பாட்டியா - ஹீலி மேத்யூஸ் இணை அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்தனர். தொடர்ந்து அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திய யஷ்திகா பாட்டியா அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 42 ரன்களுக்கு ஆட்டமிழக்க, அவரைத் தொடர்ந்து ஹீலி மேத்யூஸும் 32 ரன்களில் விக்கெட்டை இழந்து பெவிலியன் திரும்பினார்.
இதையடுத்து ஜோடி சேர்ந்த நடாலி ஸ்கைவர் - ஹர்மன்ப்ரீத் கவுர் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றனர். இதன்மூலம் மும்பை இந்தியன்ஸ் அணி 15 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன், 8 விக்கெட் வித்தியாசத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸை வீழ்த்தி, இந்த சீசனில் தங்களது ஹட்ரிக் வெற்றியைப் பதிவுசெய்துள்ளது.
Win Big, Make Your Cricket Tales Now