
மகளிர் பிரீமியர் லீக் தொடரின் முதலாவது சீசன் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இந்த நிலையில் இறுதிப்போட்டிக்குள் நுழையும் 2ஆவது அணி எது? என்பதை நிர்ணயிக்கும் வெளியேற்றுதல் சுற்று ஆட்டம் மும்பை டி.ஒய்.பட்டீல் மைதானத்தில் நடந்து வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்றுள்ள யுபி வாரியர்ஸ் அணியின் கேப்டன் அலிசா ஹீலி முதலில் பந்துவீச தீர்மானித்தார்.
அதன்படி களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணிக்கு யஷ்திகா பாட்டியா - ஹெய்லி மேத்யூஸ் இணை வழக்கம் போல அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்து அடித்தளமிட்டனர். பின் யஷ்திகா பாட்டியா 21 ரன்களிலும், ஹெய்லி மேத்யூஸ் 26 ரன்களிலும் தங்களது விக்கெட்டுகளை இழக்க, அடுத்து வந்த கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் 14 ரன்களுக்கு ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார்.
இருப்பினும் 3ஆம் வரிசையில் இறங்கிய நடாலி ஸ்கைவர் அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தியதுடன், தனது அரைசதத்தையும் பதிவுசெய்து அசத்தினார். அவருக்கு துணையாக விளையாடிய அமெலியா கெரும் தனது பங்கிற்கு 5 பவுண்டரிகளை விளாசி 29 ரன்களைச் சேர்த்து ஆட்டமிழந்தார்.