WPL 2024: பவுண்டரி மழை பொழிந்த கேப்ஸி, ரோட்ரிக்ஸ்; மும்பை இந்தியன்ஸுக்கு 172 டார்கெட்!
மும்பை இந்தியன்ஸ் அணிக்கெதிரான டபிள்யூபிஎல் லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 172 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.
மகளிர் பிரீமியர் லீக் (டபிள்யூபிஎல்) தொடரின் இரண்டாவது சீசன் கலை நிகழ்ச்சிகளுடன் இன்று(பிப்.23) கோலாகலமாக தொடங்கியது. இதில் இன்று நடைபெற்று வரும் முதல் லீக் போட்டியில் நடப்பு சாம்பியன் ஹர்மன்ப்ரீத் கவுர் தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியை எதிர்த்து, மெக் லெனிங் தலைமையிலான டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி பலப்பரீட்சை நடத்தி வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
அதன்படி களமிறங்கிய டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கு கேப்டன் மெக் லெனிங் - ஷஃபாலி வர்மா இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் ஷஃபாலி வர்மா வெறும் ஒரு ரன்னில் விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தார். அதன்பின் மெக் லெனிங்குடன் இணைந்த் அலிஸ் கேப்ஸி அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினார். இப்போட்டியில் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட மெக் லெனிங் 31 ரன்களில் விக்கெட்டை இழந்தார்.
Trending
அதன்பின் ஜோடி சேர்ந்த அலிஸ் கேப்ஸி - ஜெமிமா ரோட்ரிக்ஸ் இணை அதிரடியாக விளையாடி பவுண்டரிகளாக விளாசித்தள்ளினர். இதில் அலிஸ் கேப்ஸி தனது அரைசதத்தையும் பதிவுசெய்து மிரட்டினார். தொடர்ந்து அதிரடியாக விளையாடி வந்த அலிஸ் கேப்ஸி 9 பவுண்டரி, 3 சிக்சர்கள் என 75 ரன்கள் சேர்த்த நிலையில் ஆட்டமிழந்து பெவிலியனுக்குத் திரும்பினார்.
அவரைத்தொடர்ந்து மறுபக்கம் அதிரடியாக விளையாடி வந்த ஜெமிமா ரோட்ரிக்ஸ் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 5 பவுண்டரி, 2 சிக்சர்கள் என 42 ரன்களில் ஆட்டமிழந்து அரைசதம் அடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார். அதன்பின் களமிறங்கிய மரிஸான் கேப்பும் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தியதுடன் 16 ரன்களைச் சேர்த்து அணிக்கு தேவையான ஃபினிஷிங்கை கொடுத்தார்.
இதன்மூலம் 20 ஓவர்கள் முடிவில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 5 விக்கெட் இழப்பிற்கு 171 ரன்களைக் குவித்தது. மும்பை இந்தியன்ஸ் அணி தரப்பில் நாட் ஸ்கைவர் பிரண்ட் மற்றும் அமெலியா கெர் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினர். இதையடுத்து 172 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் மும்பை இந்தியன்ஸ் அணி விளையாடவுள்ளது.
Win Big, Make Your Cricket Tales Now