WPL 2024: ரிச்சா கோஷ் போராட்டம் வீண்; ஒரு ரன்னில் ஆர்சிபியை வீழ்த்தி டெல்லி கேப்பிட்டல்ஸ் த்ரில் வெற்றி!
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிரான டபிள்யூபிஎல் லீக் போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி ஒரு ரன்னில் த்ரில் வெற்றியைப் பதிவுசெய்து, நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறி அசத்தியுள்ளது.
மகளிர் பிரீமியர் லீக் தொடரின் இரண்டாவது சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதில் இன்று நடைபெற்ற 17ஆவது லீக் ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்ற டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்தது. அதன்படி விளையாடிய அந்த அணிக்கு கேப்டன் மெக் லெனிங் - ஷஃபாலி வர்மா இணை தொடக்கம் கொடுத்தனர்.
இதில் இருவரும் அதிரடியாக தொடங்கியதுடன், முதல் விக்கெட்டிற்கு 54 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும் அமைத்தனர். அதன்பின் 3 பவுண்டரி, ஒரு சிக்சர் என 23 ரன்கள் எடுத்த நிலையில் ஷஃபாலி வர்மா விக்கெட்டை இழக்க, அவரைத்தொடந்து 5 பவுண்டரிகளுடன் 29 ரன்களைச் சேர்த்த நிலையில் மெக் லெனிங்கும் தனது விக்கெட்டை இழந்தார். அதன்பின் இணைந்த ஜெமிமா ரோட்ரிக்ஸ் - அலிஸ் கேப்ஸி இணை அதிரடியான ஆட்டத்தை தொடர்ந்தனர்.
Trending
இதில் அடுத்தடுத்து பவுண்டரியும், சிக்சர்களுமாக விளாசிய ஜெமிமா ரோட்ரிக்ஸ் 26 பந்துகளில் தனது அரைசதத்தைப் பதிவுசெய்து அசத்தினார். அவருக்கு துணையாக விளையாடிய அலிஸ் கேப்ஸியும் அதிரடியாக விளையாட இருவரும் இணைந்து 97 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அசத்தினர். பின்னர் அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த ஜெமிமா ரோட்ரிக்ஸ் 8 பவுண்டரி, ஒரு சிக்சர் என 58 ரன்களில் தனது விக்கெட்டை இழந்தார்.
அதனைத்தொடர்ந்து அரைசதத்தை நெருங்கிய அலிஸ் கேப்ஸி 8 பவுண்டரிகளுடன் 48 ரன்கள் சேர்த்த நிலையில் ஆட்டமிழந்து அரைசதம் அடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார். அதன்பின் களமிறங்கிய வீராங்கனைகளும் சோபிக்க தவற, 20 ஓவர்கள் முடிவில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 5 விக்கெட் இழப்பிற்கு 181 ரன்களைச் சேர்த்தது. ஆர்சிபி அணி தரப்பில் அபாரமாக பந்துவீசிய ஷ்ரெயங்கா பாட்டில் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இதையடுத்து இலக்கை நோக்கி விளையாடிய ஆர்சிபி அணிக்கு கேப்டன் ஸ்மிருதி மந்தனா - சோஃபி மோலினக்ஸ் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் ஸ்மிருதி மந்தனா வெறும் 5 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில் விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தார். அதன்பின் சோஃபி மோலினக்ஸுடன் இணைந்த எல்லிஸ் பெர்ரி அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினர்.
தொடர்ந்து அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய இருவரும் அடுத்தடுத்து பவுண்டரிகளை விளாசி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினர். இதில் அரைசதத்தை நெருங்கிக்கொண்டிருந்த எல்லிஸ் பெர்ரி 7 பவுண்டரி, ஒரு சிக்சர் என 49 ரன்கள் எடுத்த நிலையில் ரன் அவுட் முறையில் விக்கெட்டை இழந்து அரைசதம் அடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார். அவரைத்தொடர்ந்து 33 ரன்கள் எடுத்திருந்த சோஃபி மோலினங்ஸும் அதே ஓவரில் விக்கெட்டை இழந்தார்.
அதன்பின் ஜோடி சேர்ந்த சோஃபி டிவைன் - ரிச்சா கோஷ் இணை அதிரடியாக விளையாடி அடுத்தடுத்து பவுண்டரியும் சிக்சர்களையும் விளாசி அணியின் வெற்றி வாய்ப்பை பிரகாசப்படுத்தினர். இதில் அதிரடியாக விளையாடி வந்த சோஃபி டிவைன் ஒரு பவுண்டரி, 2 சிக்சர்கள் என 26 ரன்களில் விக்கெட்டை இழந்து பெவிலியன் திரும்பினார். இதனால் கடைசி இரண்டு ஓவர்களில் ஆர்சிபி அணி வெற்றிக்கு 28 ரன்கள் தேவை என்ற இக்கட்டான நிலை ஏற்பட்டது.
இதில் ஜார்ஜியா வெர்ஹாம் 2 பவுண்ட்ரிகளுடன் 12 ரன்கள் சேர்த்த நிலையில் விக்கெட்டை இழந்தார். அதேசமயம் மறுமுனையில் இறுதிவரை போராடிய ரிச்சா கோஷ் தனது அரைசதத்தைப் பதிவுசெய்து அசத்திய நிலையில், கடைசி பந்தில் ரன் அவுட்டாகி ஆர்சிபி ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்தார். இதனால் 20 ஓவர்கள் முடிவில் ஆர்சிபி அணி 7 விக்கெட் இழப்பிற்கு 180 ரன்களை மட்டுமே எடுத்தது.
டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி தரப்பில் மரிஸான் கேப், அலிஸ் கேப்ஸி, ஷிகா பாண்டே, அருந்ததி ரெட்டி ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தினர். இதன்மூலம் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி ஒரு ரன் வித்தியாசத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை வீழ்த்தி த்ரில் வெற்றியைப் பதிவுசெய்ததுடன், நடப்பு சீசன் டபிள்யூபிஎல் தொடரின் நாக் அவுட் சுற்றுக்கும் முன்னேறி அசத்தியுள்ளது.
Win Big, Make Your Cricket Tales Now