
இந்தியாவில் தொடங்கி நடைபெற்று வந்த மகளிர் பிரீமியர் லீக் டி20 தொடரின் இரண்டாவது சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இத்தொடரின் இறுதிப்போட்டிக்கு மெக் லெனிங் தலைமையிலான டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியும், ஸ்மிருதி மந்தனா தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் முன்னேறின. அதன்படி அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்றுவரும் இந்த இறுதிப்போட்டியில் டாஸ் வென்ற டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் கேப்டன் மெக் லெனிங் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தார்.
இதனையடுத்து களமிறங்கிய டெல்லி அணிக்கு ஷஃபாலி வர்மா - கேப்டன் மெக் லெனிங் தொடக்கம் கொடுத்தனர். ஆர்சிபி அணி தரப்பில் முதல் ஓவரை ரேணுகா சிங் வீசினார். அந்த ஓவரில் பவுண்டரிகளே கொடுக்காமல் கட்டுப்படுத்தியா ரேணுகா சிங் 9 ரன்களைக் கொடுத்தார். ஆனால் அதன்பின் தனது அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்த தொடங்கிய ஷஃபாலி வர்மா சிக்சர்களும், பவுண்டரிகளுமாக விளாசி தள்ளி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினர்.
அவருக்கு துணையாக கேப்டன் மெக் லெனிங்கும் பவுண்டரிகளை அடிக்க அணியின் ஸ்கோரும் மளமளவென உயர்ந்தது. இதன்மூலம் முதல் ஆறு ஓவர்களிலேயே டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி விக்கெட் இழப்பின்றி 61 ரன்களைச் சேர்த்து அசத்தியது. அதன்பின் இப்போட்டியில் அரைசதத்தை நெருங்கிக்கொண்டிருந்த ஷஃபாலி வர்மா 2 பவுண்டரி, 3 சிக்சர்கள் என 44 ரன்கள் சேர்த்த நிலையில் சிக்சர் அடிக்க முயற்சித்து ஜார்ஜியே வேர்ஹாமிடம் கேட்ச் கொடுத்து பெவிலியனுக்கு திரும்பினார்.