WPL 2024: ஹர்மன்ப்ரீத் கவுர் அபார ஆட்டம்; குஜராத்தை வீழ்த்தி மும்பை த்ரில் வெற்றி!
குஜராத் ஜெயண்ட்ஸ் அணிக்கு எதிரான டபிள்யூபிஎல் லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது.
இரண்டாவது சீசன் மகளிர் பிரீமியர் லீக் தொடர் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இதில் எந்த இரு அணிகள் இறுதிப்போட்டிக்கு முன்னேறும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்து வருகிறது. இதில் இன்று நடைபெற்ற 16ஆவது லீக் போட்டியில் குஜராத் ஜெயண்ட்ஸ் - மும்பை இந்தியன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்ற குஜராத் ஜெயண்ட்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.
அதன்படி களமிறங்கிய குஜராத் ஜெயண்ட்ஸ் அணிக்கு லாரா வோல்வார்ட் - பெத் மூனி இணை அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்தனர். இதில் அதிரடியாக தொடங்கிய லாரா வோல்வார்ட் 13 ரன்கள் எடுத்திருந்த நிலையில் விக்கெட்டை இழந்தார். அதன்பின் பெத் மூனியுடன் இணைந்த தமிழக வீராங்கனை தயாளன் ஹேமலதா அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினார்.
Trending
இப்போட்டியில் தொடர்ந்து அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய இருவரும் அடுத்தடுத்து பவுண்டரியும், சிக்சர்களையும் விளாச அணியின் ஸ்கோரும் 100 ரன்களைக் கடந்தது. இதில் இருவரும் அரைசதம் கடந்து அசத்தியதுடன், இரண்டாவது விக்கெட்டிற்கு 117 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அசத்தினர். அதன்பின் கேப்டன் பெத் மூனி 8 பவுண்டரி, 3 சிக்சர்கள் என 66 ரன்களைச் சேர்த்து ஆட்டமிழந்தார்.
இதையடுத்து களமிறங்கிய ஃபோப் லிட்ச்ஃபீல்ட் 3 ரன்களிலும், ஆஷ்லே கார்ட்னர் 4 ரன்களிலும் என அடுத்தடுத்து ஆட்டமிழக்க, மறுபக்கம் அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த தயாளன் ஹேமலதா 9 பவுண்டரி, 2 சிக்சர்களுடன் 74 ரன்களைச் சேர்த்து தனது விக்கெட்டை இழந்தார். அதன்பின் களமிறங்கிய கேத்ரின் பிரைஸ் 7 ரன்களிலும், ஸ்நே ரானா ஒரு ரன்னிலும் விக்கெட்டை இழக்க, ஆட்டமிழக்காமல் இருந்த பாரதி ஃபுல்மாலி 21 ரன்களைச் சேர்த்து ஃபினீஷிங்கை கொடுத்தார். இதன்மூலம் குஜராத் ஜெயண்ட்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 190 ரன்களை குவித்தது.
அதன்பின் இலக்கை நோக்கி விளையாடிய மும்பை இந்தியன்ஸ் அணிக்கு ஹீலி மேத்யூஸ் - யஷ்திகா பாட்டியா இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் அதிரடியாக தொடங்கிய ஹீலி மேத்யூஸ் 18 ரன்களில் தனது விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய நாட் ஸ்கைவர் பிரண்ட்டும் 2 ரன்களில் விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தார். அதன்பின் யஷ்திகாவுடன் இணைந்த கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
அதன்பின் இப்போட்டியில் அரைசதம் அடிப்பர் என எதிர்பார்க்கப்பட்ட யஷ்திகா பாட்டியா 8 பவுண்டரி, ஒரு சிக்சர் என 49 ரன்கள் எடுத்த நிலையில் விக்கெட்டை இழந்து ஒரு ரன்னில் அரைசதம் அடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார். ஆனாலும் மறுபக்கம் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் தனது அரைசதத்தைப் பதிவுசெய்ததுடன், அணிக்கான வேற்றி வாய்ப்பையும் தக்கவைத்தார்.
இதனால் கடைசி இரண்டு ஓவர்களில் மும்பை அணி வெற்றிக்கு 23 ரன்கள் தேவை என்ற நிலை ஏற்பட்டது. ஆனாலும் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த ஹர்மன்ப்ரீத் கவுர் 10 பவுண்டரி, 5 சிக்சர்கள் என 95 ரன்களைச் சேர்த்து அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தார். இதன்மூலம் மும்பை இந்தியன்ஸ் அணி 19.5 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன், 7 விக்கெட் வித்தியாசத்தில் குஜராத் ஜெயண்ட்ஸ் அணியை வீழ்த்தி த்ரில் வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது.
Win Big, Make Your Cricket Tales Now