
இரண்டாவது சீசன் மகளிர் பிரீமியர் லீக் டி20 தொடர் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இதில் இன்று நடைபெற்ற 14ஆவது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் யுபி வாரியர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் மகளிர் அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. அதன்படி களமிறங்கிய அந்த அணிக்கு எதிர்பார்த்த தொடக்கம் கிடைக்கவில்லை.
அந்த அணியின் தொடக்க வீராங்கனைகள் யஷ்திகா பாட்டியா 9 ரன்களுக்கும், ஹீலி மேத்யூஸ் 4 ரன்களுக்கும் என விக்கெட்டுகளை இழந்து ஏமாற்றமளித்தனர். அதன்பின் இணைந்த நாட் ஸ்கைவர் பிரண்ட் - கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் இணை பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி விக்கெட் இழப்பை தடுத்ததுடன், அணியின் ஸ்கோரையும் மளமளவென உயர்த்தினர்.
இதில் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நாட் ஸ்கைவர் பிரண்ட் 8 பவுண்டரிகளுடன் 45 ரன்களைச் சேர்த்த நிலையில் விக்கெட்டை இழக்க, அவரைத் தொடர்ந்து கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுரும் 3 பவுண்டரி, ஒரு சிக்சர் என 33 ரன்களில் தனது விக்கெட்டை இழந்தார். இதையடுத்து களமிறங்கிய அமெலியா கெர் அபார் ஆட்டத்தை வெளிப்படுத்தியதுடன் அணியின் ஸ்கோரையும் உயர்த்தினார்.