
இந்தியாவில் நடைபெற்றுவரும் மகளிர் பிரீமியர் லீக் தொடரின் இரண்டாவடு சீசன் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இதில் நேற்று நடைபெற்ற லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை வீழ்த்தி டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 25 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியதுடன், நடப்பு சீசன் புள்ளிப்பட்டியலிலும் முதலிடத்தைப் பிடித்து அசத்தியுள்ளது.
அதன்படி இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியானது ஷஃபாலி வர்மா மற்றும் ஜெஸ் ஜோனசனின் அதிரடியான ஆட்டத்தின் மூலம் மகளிர் பிரீலிக் தொடரில் அதிகபட்ச ஸ்கோரை பதிவுசெய்து அசத்தியது. இப்போட்டியில் டெல்லி அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 194 ரன்களைச் சேர்த்து அசத்தியது. அதில் அதிகபட்சமாக ஷஃபாலி வர்மா 50 ரன்களையும், அலிஸ் கேப்ஸி 46 ரன்களையும், ஜெஸ் ஜோனசன் 36 ரன்களையும் சேர்த்தனர்.
இதையடுத்து பேட்டிங்கைத் தொடர்ந்து ஆர்சிபி அணிக்கு கேப்டன் ஸ்மிருதி மந்தனா அபாரமான தொடக்கத்தைக் கொடுத்ததுடன், மகளிர் பிரீமியர் லீக் தொடரில் தனது முதல் அரைசதத்தையும் பதிவுசெய்து அசத்தினார். அதன்பின் ஸ்மிருதி மந்தனா 74 ரன்கள் எடுத்த நிலையில் விக்கெட்டை இழக்க, மற்ற வீராங்கனைகள் சோபிக்க தவறினர். இதனால் அந்த அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 169 ரன்களை மட்டுமே எடுத்து 25 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது.