
இரண்டாவது சீசன் மகளிர் பிரீமியர் லீக் (டபிள்யூபிஎல்) தொடர் நாளுக்கு நாள் ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகரித்து வருகிறது. இத்தொடரில் இன்று நடைபெற்ற 6ஆவது லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியை எதிர்த்து, யுபி வாரியர்ஸ் அணி விளையாடியது. இப்போட்டியில் டாஸ் வென்ற யுபி வாரியர்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. இதையடுத்து களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணிக்கு ஹீலி மேத்யூஸ் - யஷ்திகா பாட்டியா இணை அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்து அணிக்கு தேவையான அடித்தளத்தை அமைத்துக்கொடுத்தனர்.
இதில் இருவரும் இணைந்து முதல் விக்கெட்டிற்கு 50 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த நிலையில் 3 பவுண்டரி, ஒரு சிக்சர் என 26 ரன்களைச் சேர்த்திருந்த யஷ்திகா பாட்டியா தனது விக்கெட்டை இழந்தார். அதன்பின் களமிறங்கிய நட்சத்திர வீராங்கனை நாட் கைவர் பிரண்ட் , ஹீலி மேத்யூஸுடன் இணைந்து அணியின் ஸ்கோரை உயர்த்தும் முயற்சியில் ஈடுபட்டார். இதில் நாட் ஸ்கைவர் 19 ரன்கள் எடுத்திருந்த நிலையில் எதிர்பாராத விதமாக ரன் அவுட்டாகி வெளியேற மறுபக்கம் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த ஹீலி மேத்யூஸ் தனது அரைசதத்தைப் பதிவுசெய்தார்.
பின் 9 பவுண்டரி, ஒரு சிக்சர் என 55 ரன்களில் ஹீலி மேத்யூஸும் தனது விக்கெட்டை பறிகொடுத்தார். இதனையடுத்து ஜோடி சேர்ந்த அமெலியா கெர் - பூஜா வஸ்திரேகர் இணை அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இதில் அமெலியா கெர் 23 ரன்களில் ஆட்டமிழக்க, அவரைத் தொடர்ந்து 18 ரன்களில் தனது விக்கெட்டை இழந்தார். இறுதியில் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திய இஸி வாங் 15 ரன்களைச் சேர்த்து அணிக்கு ஃபினீஷிங்கை கொடுத்தார். இதன்மூலம் 20 ஓவர்கள் முடிவில் மும்பை இந்தியன்ஸ் மகளிர் அணி 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 161 ரன்களைச் சேர்த்தது.