
மகளிர் பிரீமியர் லீக் தொடரின் 3ஆவது சீசன் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இத்தொடரில் இன்று நடைபெற்ற 18ஆவது லீக் போட்டியில் யுபி வாரியர்ஸ் அணியை எதிர்த்து ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி பலப்பரீட்சை நடத்தின. இதில் டாஸ் வென்ற ஆர்சிபி அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
இதையடுத்து களமிறங்கிய யுபி வாரியர்ஸ் அணிக்கு கிரேஸ் ஹாரிஸ் மற்றும் ஜார்ஜியா வோல் இணைதொடக்கம் கொடுத்தனர். இதில் இருவரும் ஆரம்பம் முதலே அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தியதுடன் அணியின் ஸ்கோரையும் மளமளவென உயர்த்தினர். இதில் இருவரும் இணைந்து முதல் விக்கெட்டிற்கு 77 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்திருந்த நிலையில் கிரேஸ் ஹாரிஸ் 7 பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 39 ரன்களைச் சேர்த்த கையோடு விக்கெட்டை இழந்தார்.
அதேசமயம் மறுபக்கம் அதிரடியாக விளையாடி வந்த ஜார்ஜியா வோல் தனது அரைசதத்தைப் பதிவுசெய்து அசத்தினார். அவருடன் இணைந்த கிரண் நவ்கிரேவும் அதிரடியாக விளையாட அணியின் ஸ்கோரும் சீரான வேகத்தில் உயர்ந்தது. இதன்மூலம் இவர்களில் பார்ட்னர்ஷிப்பும் 70 ரன்களைக் கடந்த நிலையில், 2 பவுண்டரி, 5 சிக்ஸர்கள் என 46 ரன்களைச் சேர்த்த கையோடு கிரண் நவ்கிரேவும் தனது விக்கெட்டை இழந்து அரைசதம் அடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார்.