
மகளிர் பிரீமியர் லீக் தொடரில் நேற்று நடைபெற்ற 16ஆவது லீக் போட்டியில் யுபி வாரியர்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த யுபி வாரியர்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 150 ரன்களைச் சேர்த்தது.
அந்த அணியில் அதிகபட்சமாக ஜார்ஜியா வோல் 55 ரன்களையும், கிரேஸ் ஹாரிஸ் 28 ரன்களையும் சேர்த்தனர். மும்பை இந்தியன்ஸ் தரப்பில் அமெலியா கெர் 5 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். இதனையடுத்து இலக்கை நோக்கி விளையாடிய மும்பை இந்தியன்ஸ் அணியில் ஹீலி மேத்யூஸ் 68 ரன்களையும், நாட் ஸ்கைவர் பிரண்ட் 37 ரன்களையும் சேர்த்து அணியை வெற்றியை நோக்கி அழைத்துச் சென்றனர்.
இதன்மூலம் மும்பை இந்தியன்ஸ் அணி 18.3 ஓவர்களிலேயே இலக்கை எட்டியதுடன் 6 விக்கெட் வித்தியாசத்தில் யுபி வாரியர்ஸை வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவுசெய்தது. இப்போட்டியில் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஹீலி மேத்யூஸ் ஆட்டநாயகி விருதை வென்றார். இந்நிலையில் இப்போட்டியின் போது மும்பை இந்தியன்ஸ் அணி கேப்டன் ஹர்மம்ப்ரீத் கவுர் யுபி வாரியர்ஸ் வீராங்கனை சோஃபி எக்லெஸ்டொனுடன் மோதலில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.