
ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் மகளிர் பிரீமியர் லீக் தொடரின் 3ஆவது சீசன் நேற்று கோலாகலமாக தொடங்கியது. இந்நிலையில் இத்தொடரில் இன்று நடைபெறும் 5ஆவது லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மகளிர் அணியை எதிர்த்து குஜராத் ஜெயண்ட்ஸ் மகளிர் அணி பலப்பரீட்சை நடத்தின. கோடம்பி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் இப்போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
அதன்படி களமிறங்கிய குஜராத் ஜெயண்ட்ஸ் அணிக்கு பெத் மூனி - லாரா வோல்வார்ட் இணை தொடக்கம் கொடுத்தன. இதில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட பெத் மூனி ஒரு ரன்னில் விக்கெட்டை இழக்க, அவரைத்தொடர்ந்து மற்றொரு தொடக்க வீராங்கனையான லாரா வோல்வார்ட்டும் 4 ரன்களுடன் நடையைக் கட்டினார். அவர்களைத் தொடர்ந்து களமிறங்கிய தயாளன் ஹேமலதா 9 ரன்களிலும், அணியின் கேப்டன் ஆஷ்லே கார்ட்னர் அதிரடியாக விளையாடிய நிலையில் ஒரு பவுண்டரி, ஒரு சிக்சர் என 10 ரன்னிலும் என விக்கெட்டுகளை இழந்து ஏமாற்றமளித்தனர். பின்னர் களமிறங்கிய அதிரடி வீரங்கனை டியாண்டிரா டோட்டின் 7 ரன்னுடன் நடையைக் கட்டினார்.
பின்னர் ஜோடி சேர்ந்த ஹர்லீன் தியோல் - கஷ்வீ கௌதம் இணை பொறுப்புடன் விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தும் முயற்சியில் இறங்கினர். இதில் காஷ்வி கௌதம் 2 பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 20 ரன்களை எடுத்திருந்த நிலையில் விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய சிம்ரன் ஷேக்கும் 3 ரன்களுடன் பெவிலியன் திரும்பினார். இதனால் குஜராத் ஜெயண்ட்ஸ் அணி 79 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அதன்பின் தியோலுடன் இணைந்த தனுஜா கன்வரும் பொறுப்பாக விளையாடி ஸ்கோரை உயர்த்த, அணியின் ஸ்கோரும் 100 ரன்களைக் கடந்தது.