WPL 2025: குஜராத் ஜெயண்ட்ஸ் வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது மும்பை இந்தியன்ஸ்!
குஜராத் ஜெயண்ட்ஸுக்கு எதிரான எலிமினேட்டர் சுற்று ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி 47 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்ததுடன், இறுதிப்போட்டிக்கும் முன்னேறியது.

மகளிர் பிரீமியர் லீக் தொடரின் 3ஆவது சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. மொத்த எட்டு அணிகள் பங்கேற்றிருந்த இத்தொடரின் லீக் சுற்றின் முடிவில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி நேரடியாக இறுதிப்போட்டிக்கு முன்னேறி அசத்தியுள்ளது. அதேசமயம் மும்பை இந்தியன்ஸ் மற்றும் குஜராத் ஜெயண்ட்ஸ் அணிகள் எலிமினேட்டர் சுற்றுக்கு முன்னேறியது.
இந்நிலையில் இன்று மும்பையில் உள்ள பிரபோர்ன் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற எலிமினேட்டர் சுற்று ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் குஜராத் ஜெயண்ட்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன. இப்போட்டியில் டாஸ் வென்ற குஜராத் ஜெயண்ட்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. இதையடுத்து களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணிக்கு யஷ்திகா பாட்டியா மற்றும் ஹீலி மேத்யூஸ் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் யஷ்திகா பாட்டியா 15 ரன்கள் மட்டுமே எடுத்திருந்த கையோடு விக்கெட்டை இழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினார்.
Also Read
பின்னர் ஹீலி மேத்யூஸுடன் இணைந்த நாட் ஸ்கைவர் பிரண்டு அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்த அணியின் ஸ்கோரும் மளமளவென உயர்ந்தது. தொடர்ந்து அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய இருவரும் தங்களுடைய அரைசதங்களைப் பூர்த்தி செய்ததுடன், இரண்டாவது விக்கெட்டிற்கு 133 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தும் அசத்தினர். அதன்பின் 10 பவுண்டரி, 3 சிக்ஸர்கள் என 77 ரன்களை எடுத்திருந்த நிலையில் ஹீலி மேத்யூஸ் தனது விக்கெட்டை இழந்தார். அவரைத்தொடர்ந்து 10 பவுண்டரி, 2 சிக்சர்கள் என 77 ரன்களை எடுத்த கையோடு நாட் ஸ்கைவர் பிரன்ட்டும் விக்கெட்டை இழந்தார்.
அதேசமயம் அடுத்து களமிறங்கிய கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் அடுத்தடுத்து பவுண்டரிகளையும் சிக்ஸர்களையும் விளாசி அணியின் ஸ்கோரை உயர்த்தினார். மேற்கொண்டு இறுதிவரை களத்தில் இருந்த ஹர்மன்ப்ரீத் கவுர் 12 பந்துகளில் 2 பவுண்டரி, 4 சிக்ஸர்கள் என 36 ரன்களைச் சேர்த்து கடைசி பந்தில் விக்கெட்டை இழந்தார். இதன்மூலம் மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 213 ரன்களைச் சேர்த்துள்ளது. குஜராத் ஜெயண்ட்ஸ் தரப்பில் அதிகபட்சமாக டேனியல் கிப்சன் 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
பின்னர் இலக்கை நோக்கி களமிறங்கிய குஜராத் ஜெயண்ட்ஸ் அணிக்கு பெத் மூனி மற்றும் டேனியல் கிப்சன் இணை தொடக்கம் கொடுத்தனர். இப்போட்டியில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட பெத் மூனி 6 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில் விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தார். அவரைத்தொடர்ந்து களமிறங்கிய அணியின் நடத்திர வீராங்கனைகள் ஹர்லீன் தியோல் மற்றும் கேப்டன் ஆஷ்லே கார்ட்னர் ஆகியோர் தலா 8 ரன்களுடன் நடையைக் கட்ட, மற்றொரு தொடக்க வீராங்கனையான டேனியல் கிப்சனும் 34 ரன்களுடன் ஆட்டமிழந்தார்.
அதன்பின் ஜோடி சேர்ந்த போப் லிட்ச்ஃபீல்ட் மற்றும் பார்தி ஃபுல்மாலி இணை ஓரளவு தாக்குப்பிடித்து அணியின் ஸ்கோரை உயர்த்தும் முயற்சியில் இறங்கினர். இருவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஸ்கோரை உயர்த்திய நிலையில், போப் லிட்ச்ஃபீல்ட் 31 ரன்களிலும், அடுத்து களமிறங்கிய காஷ்வி கௌதம் 4 ரன்களிலும் என விக்கெட்டை இழக்க, பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட பார்தி ஃபுல்மாலி 30 ரன்களை எடுத்திருந்த நிலையில் ஆட்டமிழந்தார். பின்னர் இணைந்த சிம்ரன் ஷேக் மற்றும் தனுஜா கன்வரும் அதிரடியாக விளையாட அணியின் ஸ்கோரும் உயர்ந்தது.
Also Read: Funding To Save Test Cricket
இறுதியில் சிம்ரன் ஷேக் 17 ரன்களிலும், தனுஜா கன்வர் 16 ரன்களிலும் விக்கெட்டை இழக்க, குஜராத் ஜெயண்ட்ஸ் அணி 19.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 166 ரன்களில் ஆல் அவுட்டானது. மும்பை இந்தியன்ஸ் தரப்பில் ஹீலி மேத்யூஸ் 3 விக்கெட்டுகளையும், அமெலியா கெர் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். இதன்மூலம் மும்பை இந்தியன்ஸ் அணி 47 ரன்கள் வித்தியாசத்தில் குஜராத் ஜெயண்ட்ஸை அணியை வீழ்த்தியதுடன், இரண்டாவது முறையாக டபிள்யூபிஎல் தொடரின் இறுதிப்போட்டிக்கு முன்னேறி அசத்தியுள்ளது.
Win Big, Make Your Cricket Tales Now