
மகளிர் பிரீமியர் லீக் தொடரில் இன்று நடைபெற்ற 9ஆவது லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் யுபி வாரியர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. பெங்களூருவில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற யுபி வாரியர்ஸ் அணி பந்துவீசுவதாக அறிவித்தது.
அதன்படி களமிறங்ய ஆர்சிபி அணிக்கு கேப்டன் ஸ்மிருதி மந்தனா மற்றும் டேனியல் வையட் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் ஸ்மிருதி மந்தனா 6 ரன்னில் விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தார். அதன்பின் டேனியல் வையட்டுடன் இணைந்த எல்லிஸ் பேர்ரி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினார். இதில் தொடர்ந்து அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய இருவரும் தங்கள் அரைசதங்களைப் பதிவுசெய்து அசத்தினர்.மேற்கொண்டு இருவரும் இணைந்து இரண்டாவது விக்கெட்டிற்கு 94 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தும் அசத்தினர்.
அதன்பின் அதிரடியாக விளையாடி வந்த டேனியல் வையட் 4 பவுண்டரி, 3 சிக்ஸர்கள் என 57 ரன்களைச் சேர்த்து தனது விக்கெட்டை இழந்தார். அவரைத் தொடர்ந்து களமிறங்கிய ரிச்சா கோஷ் 8 ரன்னிலும், கனிகா அஹுஜா 5 ரன்னிலும், ஜார்ஜியா வெர்ஹாம் 7 ரன்னிலும் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து ஏமாற்றமளித்தனர்.ஒருபக்கம் விக்கெட்டுகள் சரிந்த நிலையிலும் மறுமுனையில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த எல்லிஸ் பெர்ரி 9 பவுண்டரி, 3 சிக்ஸர்கள் என 90 ரன்களைக் குவித்தார்.